அணை பிரச்சினையை அரசியலாக்கி கருணாநிதி ஆதாயம் காண முயற்சிக்கிறார்: ஜெயலலிதா
சென்னை: முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையை அரசியலாக்கி கருணாநிதி ஆதாயம் காண முயற்சி செய்கிறார் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நதிநீர் பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதி எனக்கு அறிவுரை வழங்கியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
''நதிநீர்ப் பிரச்னை; இலங்கை தமிழர் பிரச்னை; பொதுத் துறை பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் பிரச்னை; தமிழக மீனவர் பிரச்னை; மாநிலத்தின் அதிகாரங்களை பறிக்கும் பிரச்னை என எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அவற்றில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதில் மிகுந்த ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும், கவனத்துடனும் செயல்பட்டு அதில் வெற்றிக் கனியை பறிக்கின்ற அரசாக எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு விளங்குகிறது.

விரைவாக செயல்பட்ட அதிமுக
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததிலும், காவேரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதிலும், என்.எல்.சி.யின் பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியதிலும் எந்த அளவுக்கு எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

கருணாநிதி அறிவுரை
ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக நடந்து கொண்ட அரசு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு. மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்யாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, முல்லைப் பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு தற்போது அறிவுரை வழங்கியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

பொய் கூறும் கருணாநிதி
கருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, கேரள மாநிலத்திலும், தமிழகத்திலும் முல்லைப் பெரியாறு அணை குறித்து தனித் தனியாக இரு மாநில உயர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில் 14.2.1998 அன்று தி.மு.க. ஆட்சியிலே தான், இரண்டு மாநில வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, அந்த மனுவின் மீது தான் உச்ச நீதிமன்றம் 142 அடி வரை அணையில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தமிழகத்திற்கு சாதகமாக 27.2.2006 அன்று தீர்ப்பளித்ததாக கருணாநிதி கூறி இருக்கிறார்.

நடவடிக்கை எடுக்கவில்லை
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட மனுத் தாக்கல் செய்யப்பட்டதைத் தவிர, கருணாநிதி இதற்கென வேறு எந்த முனைப்பான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.

தனி நபர்கள் மனு
உண்மை நிலை என்னவென்றால், கேரளாவைச் சார்ந்த ஒரு சில தனி நபர்களால் 1997 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை தற்காலிகமாக குறைக்கப்பட்ட அளவான 136 அடிக்கு மேல் தமிழ்நாடு உயர்த்தக் கூடாது எனக் கோரி ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இதற்கு மாறாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை முன்பிருந்தபடியே முழு நீர் மட்ட அளவான 152 அடிக்கு உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு சில தனி நபர்கள் 1998 ஆம் ஆண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி மாற்றல் மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அதிமுக ஆட்சியில்தான்
தமிழ்நாடு அரசும் ஒரு மாற்றல் மனுவை 1998 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், அதற்கு பிறகு மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சியில் இருந்த தி.மு.க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், 2001 ஆம் ஆண்டு நான் 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தான், முல்லைப் பெரியாறு குறித்த அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற 8.4.2002 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருணாநிதிதான் மறைக்கிறார்
இதனைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்ததன் அடிப்படையில் தான் 27.2.2006 அன்று தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது என்பதை கருணாநிதிக்கு நினைவூட்டவும், தெளிவுபடுத்தவும் விரும்புகிறேன். எனவே, முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல என்ற பழமொழி கருணாநிதிக்குத் தான் முழுமையாக பொருந்தும்.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
27.2.2006 ஆம் நாளிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில், கேரள அரசு சட்டத் திருத்தங்களை கொண்டு வந்ததையடுத்து, முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் எனது தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்தது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் 7.5.2014 அன்று தமிழகத்தின் உரிமையினை நிலைநாட்டக் கூடிய, நியாயமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது.

பணிகள் நடைபெறுகின்றன
இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எனது தலைமையிலான அரசால் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

வர்ணம் பூசப்படுகின்றன
உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த உடன், முல்லைப் பெரியாறு அணையைச் சார்ந்த பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அணையின் நீர்மட்டத்தினை உயர்த்துவதற்கான அனைத்து ஆரம்ப கட்டப் பணிகளை தொடங்கி தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அணையின் நீர்மட்டம் 142 அடி என அணை மற்றும் உபரி நீர் வழிந்தோடிகளில் குறியீடுகள் செய்தும்; மதகுகள் மற்றும் கதவணைகள் போன்றவற்றில் வண்ணம் பூசுதல்; கதவணைகளில் மசகு பூசுதல் பேபி அணையில் நடைபாதையை சீர்செய்தல் போன்ற ஆரம்ப கட்ட பணிகளை 8.5.2014 முதற்கொண்டே ஆரம்பித்து தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கடிதம் எழுதிய தலைமைச்செயலர்
எனது உத்தரவின்படி, 8.5.2014 அன்றே உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பார்வைக் குழுவில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவரான இரா.சுப்ரமணியனை நியமித்து ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பார்வைக் குழு உடனடியாக அதன் பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக, என்னுடைய உத்தரவின் பேரில், மத்திய நீர்வளக் குழுமம் ஓரு பிரதிநிதியை நியமிக்க வேண்டியும் மற்றும் கேரள அரசு அதன் பிரதிநிதியை நியமிக்க வேண்டியும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து 8.5.2014 அன்றே மத்திய நீர்ஆதார அமைச்சக செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

142 அடி உயர்த்த நடவடிக்கை
தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் எனது தலைமையிலான அரசால் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தும் நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழுவின் மேற்பார்வையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழுவின் மேற்பார்வையில் 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும் என்பது ஆகும்.

மக்களை குழப்புகிறார் கருணாநிதி
எனவே தான், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் பிரதிநிதியை உடனடியாக நியமித்ததுடன், மத்திய நீர்வள குழுமத்தின் சார்பிலும், கேரள அரசின் சார்பிலும் பிரதிநிதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு மட்டும் தன்னிச்சையாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, இது நன்கு தெரிந்திருந்தும், மக்களை குழப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டு இருப்பது, தூங்குபவர்களை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்கிற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர்
தமிழ்நாடு அரசினுடைய கடிதத்தின் மீது தற்போதுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், 16.5.2014-க்குப் பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அந்த ஆட்சியின் கொள்கைகளை நிர்ணயிக்கும் சக்தியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கும். அப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, உடனடியாக மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் அந்தக் குழுவால் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி கபட நாடகம்
கருணாநிதியின் கபட நாடகத்தை மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். தென் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையான முல்லைப் பெரியாறு பிரச்சனையை இனிமேலும் அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம் என கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications