கள்ளச்சாராய விவகாரத்தால் விருப்ப ஓய்வு பெற்றேனா? கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி மோகன்ராஜ் வீடியோ!
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய விவகாரத்திற்கு பயந்து விருப்ப ஓய்வு பெற்றதாக தன்னை பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் வீடியோ வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விருப்ப ஓய்வு பெற்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் பலரும் இந்த விவகாரம் பற்றி சமூக வலைதளங்களில் விவாதித்து வந்தனர். இந்த நிலையில் தான் விருப்ப ஓய்வு பெற்றதற்கான காரணத்தை விளக்கி, மோகன்ராஜ் தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், "கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் மோகன்ராஜ். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். ஒரே நாளில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணி செய்து வந்த 25 காவலர்களை இடமாற்றம் செய்தார்.
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இத்தனை தீவிரமாக இருந்த மோகன்ராஜ், பணி ஓய்வுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போதே, விருப்ப ஓய்வு கேட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் அவர் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. ஆனால், அதற்கு காவல்துறை சார்பில் மழுப்பலான ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதை தற்போதைய கள்ளச்சாராய மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
உண்மையிலேயே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை எண்ணி உண்மையான வருத்தம் இருக்குமேயானால், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அவர்களை மிரட்டிய திமுக முக்கியப் புள்ளிகள் யார் என்பதையும், இதனை அறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் யார் என்பதையும் விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், எல்லாம் தெரிந்திருந்தும், தன் கட்சியினரைக் காப்பாற்ற பொதுமக்களைப் பலி கொடுத்த முதலமைச்சர் என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்." எனத் தெரிவித்திருந்தார்.
முன்னாள் எஸ்.பி மோகன்ராஜ் பரபர விளக்கம்: இந்த நிலையில் தான் விருப்ப ஓய்வு பெற்றதற்கான காரணத்தை விளக்கி, கள்ளக்குறிச்சி முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "என் மீது உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை பரப்புகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை பாயும்" என மோகன்ராஜ் வீடியோ வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் எஸ்.பி மோகன்ராஜ் வெளியிட்ட வீடியோவில், "கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தற்போது கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற துயரச் சம்பவத்தை தொடர்பு படுத்தி, சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.

உண்மைக்கு புறம்பான தகவல்: பணி ஓய்வுக்கு சில மாதங்கள் இருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் விருப்ப ஓய்வு பெற்றேன். அமெரிக்காவில் உள்ள எனது மகள் மற்றும் மருமகளின் பிரசவம் காரணமாக எனது மனைவியுடன் நான் அங்கு செல்ல வேண்டி இருந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றேன். ஆனால், எனது இந்த முடிவு குறித்து தற்போது சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
கள்ளச்சாராய விவகாரத்திற்கு பயந்து நான் விருப்ப ஓய்வு பெற்றதாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை. என் மீது உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை பரப்புகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படு," என்று மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications