வெள்ளம் பாதித்த சென்னையில் மருத்துவ முகாம் நடத்திய கமல் ரசிகர்கள்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் அகில இந்திய கமல்ஹாஸன் நற்பணி இயக்கத்தில் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு பிரபலங்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். மேலும் மருத்துவ முகாம் நடத்தி மக்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகளும் அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் கமல்ஹாஸன் ரசிகர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

மருத்துவ முகாம்
அகில இந்திய கமல்ஹாஸன் நற்பணி இயக்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள சிந்தாரிபேட்டை, ஓட்டேரி, பெரம்பூர் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

மருந்து, மாத்திரை
மருத்துவ முகாம்களில் டாக்டர்கள் ரகுபதி, அழகப்பன், சுனில் மற்றும் பலர் கலந்து கொண்டு மக்களை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் அளித்தனர்.

இன்றும்
இன்று ஜாபர்கான்பேட்டை, ராமாபுரம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. முகாம்களில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

நிவாரணப் பொருட்கள்
கமல்ஹாஸன் நற்பணி இயக்கம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தங்கவேலு, ரமேஷ், கிருபாகரன், எழுமலை, லதா பிரசாந்த், வேலு, சரவணன், கணேஷ், காமராஜ், அருள், சத்யநாராயணன், ஜீவா, மூர்த்தி, பிரபு, தம்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

வரிப்பணம் எங்கே?
சென்னையில் நிர்வாகமே இல்லை, மக்களாகிய நாங்கள் கட்டிய வரிப்பணம் எல்லாம் எங்கே போனது என்று சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாஸன் கேள்வி எழுப்பியிருந்தார்.

மின்தடை
கமல்ஹாஸன் அரசு நிர்வாகத்தை இப்படிக் கேள்வி கேட்டதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் 7 நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் மின்சாரம் வந்தது.

இல்லவே இல்லை
அரசு மற்றும் நிர்வாகத்தை கேள்வி எழுப்பி நான் எந்த பேட்டியும் அளிக்கவே இல்லை என்று கமல்ஹாஸன் பின்னர் பல்டியடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications