“பதர்களைத் தூற்றி நெல்மணிகளைக் குவித்து” வெற்றிகள் ஈட்டிடுவோம்: கருணாநிதி வாழ்த்து
சென்னை: தமிழகத்தின் உன்னதங்களை உருக்குலையச் செய்துள்ள உலுத்தர்களை; ஊழல் பெருச்சாளிகளை ஒழித்து - மீண்டும் தமிழினம் எழுச்சிபெற 2016 சட்டமன்றத் தேர்தல் களத்தில், "பதர்களைத் தூற்றி நெல்மணிகளைக் குவித்து" வெற்றிகள் ஈட்டிடுவோம் என்று தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இன்று அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி:
தைத் திங்கள் முதல் நாள்! தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் நன்னாள்! தமிழர் இதயமும் இல்லமும் மகிழும் இன்பத் திருநாள்!

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே இருந்த போது, உழுது பயன்கண்டு அனைவரும் வயிறார உண்ண - உடுத்த வகை செய்திடும் உழவர் பெருமக்களின் துயர் தீர 7000 கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்களைத் தீர்த்து; மழை, வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலிவடைந்திடக்கூடாது என்பதற்காகப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் செலுத்த வேண்டிய 50 விழுக்காடு காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும் எனத் திட்டம் கண்டு; வட்டியிலாப் பயிர்க் கடன் தந்து; விவசாயம் தடைபடாமல் நடைபெற - தண்ணீர்த் தேவையை நிறைவு செய்திட விவசாயப் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கி; விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உருவாக்கி; நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச நிலம் வழங்கி; நெல்லுக்கும் கரும்புக்கும் விலைகளை உயர்த்தித் தந்து; தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவையின்றி கரும்புக்கான விலைகளை வழங்கச் செய்து - ஆண்டுதோறும் ஜனவரி 1 முதல் ஜனவரி 10 வரை தினமும் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் நியாய விலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் இலவச வேட்டி-சேலைகள் வழங்கி; சர்க்கரைப் பொங்கல் தயாரித்திடத் தேவையான பச்சரிசி - வெல்லம் போன்ற பொருள்கள் கொண்ட பைகளை நல்கி எல்லோரையும் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்திடச் செய்தோம்!
கடந்த 5 ஆண்டுகளாக, காவிரியில் ஜுன் 12இல் மேட்டூர் அணை திறக்கப்படாமல் விவசாயம் பாழ்பட்டு - வேதனையில் வாடிய விவசாயிகளின் விழிநீர் துடைத்திட வக்கில்லாமல்; அறிவித்த வறட்சி, வெள்ள நிவாரணங்களைக் கூட அனைவர்க்கும் முறையாக வழங்கிடாத ஓர் அரசு; அண்மையில் பெய்த பெருமழையின்போது செம்பரம்பாக்கம் ஏரி நீரை உரிய காலத்தில் திறக்காமல், ஒரே நேரத்தில் - அதிலும், நள்ளிரவு நேரத்தில் முன்னெச்சரிக்கை எதுவுமின்றி 30 ஆயிரம் கனஅடிகளுக்கு மேலாகத் திறந்துவிட்டு; ஏராளமான உயிர்ப்பலிகள் நிகழ்ந்திட - வீடுகள், தொழிற்கூடங்கள், கார் முதலிய வாகனங்கள் எல்லாம் மூழ்கி வீணாகிட - கட்டுவதற்கு மாற்றுத் துணிகூட இல்லாத சூழலில் - வயதான பெற்றோருடனும், குழந்தை-குட்டிகளுடனும் நல்லோர் சிலரின் உதவிகளோடு வீடுகளை விட்டு வெளியேறி இலட்சக்கணக்கான மக்கள் தவித்திடக் காரணமான ஓர் அரசு - இன்றைய அ.தி.மு.க. அரசு என்பதை நாடே பார்த்து நகைக்கிறது.
2006 சட்டமன்றத் தேர்தலின்போது, "தேர்தலின் கதாநாயகன் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை" எனப் பாராட்டப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, தேர்தலில் வென்ற பின் நடைபெற்ற பதவி ஏற்பு விழா மேடையிலேயே கையெழுத்திட்டு ஆணைகள் பிறப்பித்து வரலாறு படைத்தவர்கள் நாம்!
ஆனால், "புலியைப் பார்த்துக் கோடு போட்டுக் கொண்ட பூனையைப் போல" வாக்குறுதிகள் பலவற்றைத் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தாலும், அவற்றை நிறைவேற்றிட அக்கறை காட்டாத ஓர் அரசு - "சர்க்கரை என்று சொல்லிவிட்டாலே வாய் இனிக்குமா?" என்று பாமரன் கூட கேட்பானே, அப்படி; சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் 110! ஒவ்வொரு 110-லும் பல கோடி ரூபாய் மதிப்புடைய ஆரவார அறிவிப்புகள்! அறிவித்தால் போதாதா? அவற்றை நிறைவேற்ற வேண்டுமா? எனக் கேட்பது போல்; அறிவித்த எதனையும் நிறைவேற்றாத ஓர் வெற்று அரசு, இன்றைய அ.தி.மு.க. அரசு!
சட்டமன்றத்தை மக்கள் பிரச்சினைகளைப் பேசிடும் மாமன்றமாக நடத்திடாமல், "மகாராணி" புகழ்பாடும் தர்பாராகவே மாற்றிவிட்ட கேவலமான ஓர் அரசு - இன்றைய அ.தி.மு.க. அரசு என நடுநிலையாளர் எல்லோரும் எடுத்துரைக் கின்றனர்.
"சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்" என்ற கழக ஆட்சியில், தொழில் வளர்ந்தால் வேலை வாய்ப்புகள் பெருகும்! பொருளாதாரம் உயரும்! தமிழனின் வாழ்க்கைத் தரம் சிறக்கும் எனத் திட்டமிட்டு - ஆட்சி அமையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழகம் முழுவதிலும் தொழில்களை வளர்த்ததால் தொழில் வளர்ச்சியில் 1967-76 கழக ஆட்சியில் இந்தியாவில் தமிழகம் மூன்றாம் இடம்! 1977-88 அ.தி.மு.க. ஆட்சியில் 10ஆம் இடம்! 1989-91இல் கழக ஆட்சியில் முதல் இடம்! 1991-96 அ.தி.மு.க. ஆட்சியில் 6ஆம் இடம்! 1996-2001 கழக ஆட்சியில் முதல் இடம்! 2001-2006 அ.தி.மு.க ஆட்சியில் 5ஆம் இடம்! 2006-2011 கழக ஆட்சியில் முதல் இடம்! 2011-2016 அ.தி.மு.க. ஆட்சியில், இன்று - தொழில் வளர்ச்சியில் தமிழகம் படுபாதாளத்தில்! அதாவது இந்தியாவிலேயே கடைசி இடத்தில்!
அ.தி.மு.க. ஆட்சி அமையும் போதெல்லாம் தமிழ் மொழி - தமிழக முன்னேற்றம் - தமிழர் நலம் கருதாமல் சுயநலம் - சொந்த நலம் மட்டுமே குறி எனச் செயல்பட்டதால் - "சொந்தமில்லை பந்தமில்லை" என்று கூறியபடியே - எங்கும் ஊழல்; எதிலும் ஊழல் என ஊழல் மகாராணியாகி - வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் நடத்தி - கொடநாடு, சிறுதாவூர், பையனூர் உட்பட பல்வேறு இடங்களில் மாடமாளிகைகள், கூடகோபுரங்கள் எனச் சொத்துகளைக் குவித்து; நீதிமன்றங்களால் தண்டனைகளைப் பெற்று, சித்துகளால் நேர்ந்த கணக்குப் பிழையால் விடுதலை எய்திய போதிலும்; உச்சநீதி மன்றத்தில், "அப்பீல் கத்தி" தொங்கிய நிலையில் இருந்தபோதும் - உடன்பிறவாச் சகோதரி கும்பல்கள் திரையரங்குகளை வாங்கிக் குவித்த கதைகள் ஆதாரங்களுடன் வெளிவந்த பின்னரும் - நாள்தோறும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றிய உண்மைகள் அடுக்கடுக்காக வெளிவந்து கொண்டுள்ள நிலையிலும் கொஞ்சமும் நெஞ்சம் குறுகுறுக்காமல் - குற்றச்சாட்டுகளைக் கூறுவோர் மீது வழக்குகள் தொடுத்து அடக்க நினைத்திடும் ஆணவக்காரர்களின் கொட்டம் அடக்கிட;
அன்று,
தமிழரின் பண்பாட்டுச் சின்னம் கண்ணகிச் சிலையை அகற்றி;
தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் என்ற சட்டத்தை நீக்கி;
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உலகப் பொதுமறை வகுத்த அய்யன் திருவள்ளுவர் உருவப் படத்தைப் பாடநூல்களில் ஒட்டுத் தாளால் மறைத்து;
முக்கடல் சூழ் குமரிமுனையில் 133 அடி உயரம் கொண்டு எழுந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவரின் சிலையை முறையாக பராமரிக்காமல்;
"செம்மொழி தமிழ்" என்பதை மறைத்திட செம்மொழிப் பூங்காவைக் குலைத்து;
"தொல்காப்பியப் பூங்கா" பெயர் மறைத்து;
பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தைச் சிதைத்து;
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அழகிழக்கச் செய்து;
தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகமும் பல்லாண்டு காலம் மெய்வருத்தம் பாராது - பசி நோக்காது - கண் துஞ்சாது - ஈட்டிமுனைகளாக வீசப்பட்ட சொல்லையும் கல்லையும் கூடப் புறந்தள்ளி; உழைத்து உழைத்து நாம் உருவாக்கிய தமிழரின் - தமிழகத்தின் உன்னதங்களை உருக்குலையச் செய்துள்ள உலுத்தர்களை; ஊழல் பெருச்சாளிகளை ஒழித்து - மீண்டும் தமிழினம் எழுச்சிபெற 2016 சட்டமன்றத் தேர்தல் களத்தில், "பதர்களைத் தூற்றி நெல்மணிகளைக் குவித்து" வெற்றிகள் ஈட்டிட; இந்தத் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாளில் வாழ்த்துகள் கூறி, கழகக் கண்மணிகளே! கணநேரமும் வீணாக்காமல் களத்தில் உழைத்திடுவீர் என உங்கள் அண்ணன் வேண்டுகிறேன்.
ஒன்றுபட்டு உழைத்திடுவீர்!
ஒப்பிலா வெற்றி குவித்திடுவீர்!
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications