நாடாளும் ஜெயாவே.. நாவை அடக்குவது நல்லது - கருணாநிதி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழகத்திற்கான மின் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு உடன்பிறப்புக்கான கடிதம் மூலம் கருணாநிதி விரிவாகப் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

நீட்டி முழக்கிய பேச்சு
முதல்வர் ஜெயலலிதா, திருப்பூர், காங்கேயம் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது தமிழகத்தில் மின் உற்பத்தி பற்றி நீட்டி முழக்கியிருக்கிறார். "மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காலத்தில், அனைத்து மின் திட்டங்களையும் அதோகதியில் விட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, இப்போது மும்முரமாக நடைபெற்று வரும் மின் திட்டங்களின் கதியைப் பற்றி வினவியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

குற்றச்சாட்டுக்குப் பதில்
மேலும் ஜெயலலிதா அந்தப் பேச்சின்போது 3-3-2014 அன்று நான் எழுப்பிய ஒரு குற்றச்சாட்டிற்குப் பதிலும் கூறியிருக்கிறார். அதாவது தமிழ்நாட்டை மின்மிகை மாநில மாக்குவதற்காக 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க மிக உய்ய அனல் மின் நிலையத் திட்டத்திற்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டுவதைப் பற்றி அனைத்து நாளேடுகளிலும் - தவறு; அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கும் அனைத்து நாளேடுகளிலும் முழுப் பக்க விளம்பரங்கள் வெளி வந்தன.

நீண்ட அறிக்கை
அதுபற்றித்தான் "29-3-2012 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த ஒரு நீண்ட அறிக்கையில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டம் சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் என்றும்; இந்த அனல் மின் திட்டம் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும் என்றும் அறிவித்தாரே; இதற்கான மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி 24-1-2013 அன்றும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி 18-2-2013 அன்றும் கிடைத்து ஓராண்டு ஆகிறதே; இப்போதுதான் முதலமைச்சர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் என்றால் மின் உற்பத்தியில் அ.தி.மு.க. அரசு எந்த அளவிற்கு அக்கறையோடு விரைவு காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

விலை இழுபறி
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புக் கொள்ளப்பட்ட நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையில் விலை இழுபறி காரணமாகத்தான் ஓராண்டு காலமாக இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படவில்லை என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2012 மார்ச் மாதத்தில் பேரவை யில் அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவே இரண்டு ஆண்டுகள் என்றால், இந்தத் திட்டத்தின்கீழ் மின் உற்பத்தி கிடைக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? இதுதான் மின் உற்பத்தியைப் பெருக்கி மின்வெட்டை நீக்குவதில் அ.தி.மு.க. அரசு காட்டுகின்ற வேகமா? தொடக்க நிலையிலேயே மிகவும் தாமதமாகியுள்ள இத்திட்டத் திற்குக் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி வைக்க அரசு வரிப் பணத்தைச் செலவிட்டு நாளேடுகளுக்கு முழுப் பக்க விளம்பரம் கொடுத்தது நியாயமா?" என்று நான் கேட்டதற்குத்தான் திருப்பூர் கூட்டத்தில் பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு, பூசி மெழுகி இருக்கிறார்.

அதற்கு விளக்கம் இல்லையே
அந்தப் பதிலில் அ.தி.மு.க. ஆதரவு நாளேடு களுக்கு மட்டும் முழுப் பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டது பற்றி எந்த விளக்கமும் இல்லை! இரண்டாண்டுகள் தாமதத்திற்கு ஜெயலலிதா பதில் கூறும்போது, 24-1-2013 அன்று மத்திய அரசின் சுற்றுச் சூழல் அனுமதி கிடைத்ததாகவும், அதன் பின்னர் ஒப்பந்தப்புள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதியாக "லான்கோ இன்ப்ரா டெக்" நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதாகவும், இதற்கான பணி ஆணையினை மேற்படி நிறுவனத்திடம் 27-2-2014 அன்று, தான் வழங்கியதாகவும் தெரிவித்திருக் கிறார். இதைத்தான் நானும் விளக்கியிருந்தேன். 24-1-2013 அன்றே மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகும், டெண்டர் முடிவு செய்ய 13 மாதங்கள் தேவைதானா என்று கேட்டிருந்தேன். முக்கியமான இந்தப் பிரச்சினையில் ஏற்பட்ட தவிர்க்கக்கூடிய தாமதத்திற்கு, அம்மையாரிடம் ஏற்கத்தக்க பதிலேதும் இல்லாததால், பதில் சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டார்.

தன்னால் அறிவிக்கப்பட்டது போல
ஜெயலலிதா தனது பேச்சில், "660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க மிக உய்ய அனல் மின் நிலையத் திட்டம் 29-3-2012 அன்று என்னால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது" என்று பேசியிருக்கிறார். ஆனால் அவர் இந்தத் திட்டத்தை பேரவையில் அறிவிப்பதற்கு முன்பே, தி.மு. கழக ஆட்சியில் இந்தத் திட்டத்திற் கான 275 உயர புகை போக்கியை அமைத்திட இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி 16-5-2008 அன்றும்; கடலோரப் பகுதி ஒழுங்கு முறை அனுமதி 23-12-2008 அன்றும் பெறப்பட்டது என்ற உண்மையை அப்படியே பேரவையில் மட்டுமல்ல; மக்கள் மத்தியிலும் மறைத்துவிட்டு தன்னால்தான் புதிதாக அறிவிக்கப்பட்டது போலப் பேசியிருக்கிறார்!

பதிலேதும் இல்லை
நான் 3-3-2014 தேதிய "முரசொலி"யில் எண்ணூர் புதிய மின் திட்டத்தைப் பற்றிக் கூறிய போது, 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் இந்தத் திட்டத்தை அறிவித்தபோது, மேலும் சில மின் உற்பத்தித் திட்டங்களை தமிழக அரசின் சார்பில் தொடங்கப் போவதாக அறிவித்தீர்களே, அந்தத் திட்டங்களெல் லாம் என்ன ஆயின என்றும்; ஏன் அதற்கு முன்பே, 2011-12ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் "4,800 கோடி ரூபாய்ச் செலவில் 800 மெகாவாட் உடன்குடி விரிவுத் திட்டம்; 9,600 கோடி ரூபாய்ச் செலவில் 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின் திட்டம்; 3,600 கோடி ரூபாய்ச் செலவில் 40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின் நிலையத்திற்குப் பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம்; 4,800 கோடி ரூபாய்ச் செலவில் 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலைத் திட்டம் ஆகியவை தொடங்கப்படும் என்றும், அதனால் அரசாலும், பல்வேறு கூட்டு முயற்சிகளாலும் மொத்தம் 22,800 கோடி ரூபாய் முதலீட்டில் 3,800 மெகா வாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும்" என்றும் அறிவித்திருந்தீர்களே, அவைகள் எல்லாம் என்ன ஆயிற்று என்றும் வினவியிருந்தேன். இதற்கும் முதலமைச்சர் ஜெயலலிதா விடம் சொல்வதற்குப் பதிலேதும் இல்லை என்பதால், அவர் எந்தவிதமான விளக்கமும் தரவில்லை.

வாயே திறக்கவில்லையே
"அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எத்தனை திட்டங்கள் நடைமுறைக்கு வந்து, எந்த அளவிற்கு மின் உற்பத்தி நடைபெறுகிறது? நாளையே முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்வதற்கு முன் நாட்டு மக்களுக்குப் புள்ளி விவரங்களோடு அறிவிப்பாரா" என்றும் நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அந்த திட்டங்களைப் பற்றியும் எதுவும் எழுதித் தரப்படாததால், முதலமைச்சர் தனது பேச்சிலே வாயே திறக்கவில்லையோ? மாறாக அனைத்து மின் திட்டங்களையும் நான் அதோகதி யில் விட்டேன் என்றும், தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் முனைப்பு காட்டவில்லை என்றும் அதற்காக எனக்கு மறக்க முடியாத "சம்மட்டி அடி" கொடுக்க வேண்டுமென்றும் ஆவேசத்தோடு கூறியிருக்கிறார்.

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்
உண்மையில் தேவையான மின்சாரத்தை வழங்கு வதற்கான நடவடிக்கையில் தி.மு.கழக ஆட்சியில் எவ்வகையான முனைப்பு காட்டப்பட்டது? அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா எப்படிப்பட்ட முயற்சி மேற்கொண்டார்? என்பதைப் பலமுறை புள்ளி விபரங்களை எடுத்துக்காட்டி விளக்கிவிட்டேன். இதோ; மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன்!

10 புரிந்துணர்வு திட்டங்கள்
1991-1996இல் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பத்து மின்சார உற்பத்தித் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் கையெழுத்திடப்பட்ட போதிலும்; எந்தத் திட்டங்களுக்கும் தேவையான நிலம் கையகப்படுத் தப்படவில்லை; சுற்றுப்புறச் சூழல் துறையின் அனுமதியும் பெறப்படவில்லை. 2010ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் மின் உற்பத்திக்காக நடை பெற்றுக் கொண்டிருந்த 13 பணிகள், வட சென்னை (நிலை 2), மேட்டூர், தூத்துக்குடி, வள்ளூர், பவானி கட்டளை (2), பவானி கட்டளை(3), பவானி தடுப்பணை (1), பவானி தடுப்பணை (2), பெரியார் வைகை (1), பெரியார் வைகை (2), பெரியார் வைகை (3), பெரியார் வைகை (4), உடன்குடி ஆகியவைகளாகும்.

சட்டசபையில் அறிவித்த 7 திட்டங்கள்
முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகச் சட்டப் பேரவையில் விரைவில் மின் உற்பத்தி துவக்கப்பட உள்ள திட்டங்கள் என்று 7 திட்டங்களை அறிவித்தார். அவை மேட்டூர், வள்ளூர் (1ஆம் அலகு), வள்ளூர் (2ஆம் அலகு), வள்ளூர் (3ஆம் அலகு), வடசென்னை (1ஆம் அலகு), வடசென்னை (2ஆம் அலகு), தூத்துக்குடி (இரண்டு அலகுகள்). இந்த ஏழு திட்டங்களும் வடிவமைக்கப்பட்டு, தொடக்க நிலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான். கழக ஆட்சியில் துவக்கப்பட்ட இந்தத் திட்டங்களிலிருந்து கிடைக்கின்ற மின் உற்பத்திதான் தற்போது தமிழகத் திற்கு நெருக்கடியான காலகட்டத்தில் மிகுந்த பயன்பாட்டினை அளிக்கின்றது.

அடியேன் முதல்வராக இருந்தபோது
மின் உற்பத்திக்காக 2001-2006ஆம் ஆண்டு களில் ஜெயலலிதா ஆட்சியில் செலவிடப்பட்ட மொத்தத் தொகை வெறும் 700 கோடி ரூபாய்தான். ஆனால் 2006-2011ஆம் ஆண்டுகளில் அடியேன் முதலமைச்சராக இருந்தபோது, மின் உற்பத்திக்காக நான் எந்தவிதமான முனைப்பும் காட்டவில்லை என்று திருப்பூரில் அம்மையார் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே, அந்தக் கருணாநிதி முதல்வராக இருந்த அந்த ஐந்தாண்டுகளில் மின் உற்பத்திக்காகச் செலவு செய்த தொகை, 2007-2008இல் 774 கோடி ரூபாய்; 2008-2009இல் 710 கோடி ரூபாய்; 2009-2010இல் 2,800 கோடி ரூபாய்; 2010-2011இல் 3,100 கோடி ரூபாய்; 2011-2012இல் 3,700 கோடி ரூபாய் என்று மொத்தம் 11,084 கோடி ரூபாய். மின் உற்பத்திக்காக 2011-2012இல் தி.மு.கழக ஆட்சியில் செலவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்ட தொகை 3,700 கோடி ரூபாய். அதற்கு அடுத்த ஆண்டு, 2012-2013இல் ஜெயலலிதா ஆட்சியில் மின் உற்பத்திக்காக ஒப்புதல் வழங்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 2,067 கோடி ரூபாய்.

பித்தலாட்ட அதிமுக தேர்தல் அறிக்கை
அதாவது கழக ஆட்சியில் ஒப்புதல் வழங்கப்பட்ட தொகையை விட சுமார் 1,700 கோடி ரூபாய் குறைவு. இந்த அழகில்தான் மின் உற்பத்தியில் நான் முனைப்பு காட்டவில்லை என்ற பித்தலாட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 2012ஆம் ஆண்டுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சி களில் கழிவைக் கொண்டு, 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். மூன்றாண்டுகள் ஆட்சி நடத்திய பிறகும், இதற்காக எந்த ஆயத்தப் பணியாவது மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? இந்தக் கேள்வியை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்; இதுவரை பதில் இல்லையே, ஏன்?

சுட்டிக் காட்டியிருக்கிறேன்
முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகச் சட்டப் பேரவையில் 20-10-2012 அன்று "சூரிய மின் சக்திக் கொள்கை" பற்றி அறிவித்து மூன்றாண்டுகளில் 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப் போவதாகத் தெரிவித்தாரே; இதுவரை சூரிய மின் சக்திக் கொள்கை மூலம் எத்தனை மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிப்பாரா? முதலமைச்சர் ஜெயலலிதா திருப்பூரில் பேசும்போது, "தமிழ்நாட்டில் மின் உற்பத்தியும், தொழில் வளர்ச்சியும் பெருகிக் கொண்டே வருகின்றன" என்று பெருமைப்பட்டுக் கொண் டிருக்கிறார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பற்றியும், முதலீடுகள் எவ்வாறு வெளி மாநிலங் களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன என்பது பற்றியும், கர்நாடக மாநில முதலமைச்சர் கோவைக்கே வந்து முதலீடுகளை ஈர்க்க மாநாடு நடத்தியது பற்றியும் நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்த ஆட்சியின் தொழில் வளர்ச்சிக்குச் சான்றாக மேலும் ஒரு உதாரணம் கூறுகிறேன்.

இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா
தி.மு. கழக ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93 ஆயிரம் ஆகும். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற பெண்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 78 ஆயிரம். அ.தி.மு.க. ஆட்சியில் வேலை வாய்ப்பினை இழந்த பெண்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரம் ஆகும். இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா? தி.மு.கழக ஆட்சியில் மகளிர் பெற்று மகிழ்ந்திருந்த வேலை வாய்ப்பை, ஜெயலலிதா ஆட்சியில் இழந்து வாடுகின்றனரே; தமிழகத்தில் தொழில் வளர்ச்சி எங்கே துலங்குகிறது? இலட்சக்கணக்கான பெண்கள் ஏற்கனவே பெற்றிருந்த வேலை வாய்ப்பைக்கூட காப்பாற்ற முடியாத ஒரு பெண் முதலமைச்சர், தொழில் வளர்ச்சி பெருகுகிறது என்று பேசுவது எவ்வளவு விபரீதமான வேடிக்கை? நாவால் பேசி, அதனை நாளேடுகள் அச்சியற்றி விளம்பரம் செய்துவிட்டால் போதுமா? நாட்டில் செயலாக்கத்திற்கு வரவேண்டாமா?

மற்றுமோர் உதாரணம்
மற்றுமோர் உதாரணம்! தமிழக அரசு இரண்டு சிமெண்ட் தொழிற்சாலைகளை ஆலங்குளத்திலும், அரியலூரிலும் நடத்தி வருகிறது. ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையில், 2010-2011ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியில் உற்பத்தி 2 இலட்சத்து 3 ஆயிரத்து 40 டன்கள். அ.தி.மு.க. ஆட்சியில், 2011-2012ஆம் ஆண்டில் அங்கே சிமெண்ட் உற்பத்தி 1 இலட்சத்து 34 ஆயிரத்து 640 டன்கள். 68 ஆயிரத்து 400 டன்கள் குறைவு. அதுபோலவே அரியலூர் அரசு சிமெண்ட் தொழிற் சாலையில் கழக ஆட்சியில் உற்பத்தி 4 இலட்சத்து 90 ஆயிரத்து 35 டன்கள்.

விரிவாக பதில் அளிப்பாரா
அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தி 3 இலட்சத்து 88 ஆயிரத்து 55 டன்கள். கழக ஆட்சியைவிட 1 இலட்சத்து ஓராயிரத்து 980 டன்கள் குறைவு. இதுதான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகியிருப்பதற்கான அடை யாளமா? தமிழக முதலமைச்சர் இதற்கெல்லாம் விரிவாக பதில் அளிப்பாரா?

அளிக்கிறாரோ இல்லையோ
உடன்பிறப்பே, அம்மையார் விடையளிக்கிறாரோ, இல்லையோ? நீ இந்த விவரங்களை யெல்லாம் எடுத்துச் சென்று மக்களிடம் விளக்கிக் கூறவேண்டும். தமிழகத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது? எப்படியெல்லாம் வெற்று அறிவிப்புகளாலும், வீண் ஆரவாரங்களாலும் மக்களைத் திசை திருப்புகிறார்கள்; ஏமாற்றிட எத்தனிக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திட வேண்டும். அந்தப் பணியிலே நீ தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நான் நன்றாகவே அறிவேன். எனினும் தேவையான விவரங்களைத் தொகுத்து உனக்கு உதவிட வேண்டியது என் கடமை அல்லவா; அதைத்தான் நான் செய்து வருகிறேன், நீ உன்னுடைய பணிகளில் தொடர்ந்து மேலும் மேலும் முன்னேறுவாய் என்ற நம்பிக்கையோடு! நம் கடன் தமிழ் மக்களுக்கு நாள்தோறும் பணி செய்து கொண்டே இருப்பதுதானே என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications