யாருடன் கூட்டணி? திமுகவை விட்டு பாஜகவுடன் பேச்சுவார்த்தை- தேமுதிக அறிவிப்பு!
சென்னை: திமுக கூட்டணியில் திடீர் திருப்பமாக தேமுதிக-வுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் தேமுதிகவோ பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்துள்ளது.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது போல லோக்சபா தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் அரங்கேறி வருகின்றன. லோக்சபா தேர்தலில் தமிழக கட்சிகள் கிட்டத்தட்ட தங்களது கூட்டணியை இறுதிசெய்து விட்டன.
தி.மு.க. தங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து உள்ளது. விடுதலை சிறுத்தைகளுடன் சற்றே இழுபறி நீடிக்கின்றது.

தேமுதிய யாருடன்?
பாஜக கூட்டணியில் ம.தி.மு.க இடம் பெற்றிருக்கிறது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க பாஜக பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தே.மு.தி.க. தங்களது முடிவை அறிவிக்க பாஜக கெடு விதித்தும் பார்த்தது.

விஜயகாந்த் மவுனம்
சிங்கப்பூரில் இருந்து திரும்பிய விஜயகாந்த், கூட்டணி குறித்து எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. பாஜக தரப்பு தங்களது கூட்டணி குறித்து நேற்று முழு முடிவை அறிவிக்க இருப்பதாக தெரிவித்தது. ஆனால் விஜயகாந்திடம் இருந்து எந்த விதமான சாதகமான பதிலும் கிடைக்காததால், தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விரக்தி அடைந்தனர். ஒரு கட்டத்தில் பாஜக- தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டது.. 14 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்று செய்திகள் பரவின.
அதே நேரத்தில் கூட்டணி குறித்து டெல்லியில் அறிவிப்பதாக கூறி பாஜக தலைவர்கள் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

திமுக நோக்கி நகரும் தேமுதிக
ஆனால் நேற்று பிற்பகலில் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு செல்ல இருப்பதாக பரவலாக தகவல்கள் வெளியானது. ‘இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் டெலிபோனில் பேச முயற்சி நடந்ததாகவும் ஆனால், இனி கூட்டணி பற்றி பேச வேண்டும் என்றால் விஜயகாந்த், கோபாலபுரத்திற்கோ அல்லது அறிவாலயத்திற்கோ வர வேண்டும்' என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

உறுதி செய்யாத தேமுதிக
தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசப்பட்டதா என்பது குறித்து தே.மு.தி.க. தரப்பில் கருத்து கேட்க முயன்ற போது, அங்கிருந்து யாரும் இதுபற்றி பேச முன்வரவில்லை.

காங்கிரஸ் முயற்சி
இதனிடையே, காங்கிரஸ் மேலிடத்திலிருந்து மீண்டும் திமுக-வின் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சு தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

5 தொகுதிகள் காங்கிரஸுக்கு?
திமுக தரப்பில் காங்கிரஸுக்குச் சாதகமான தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் 5 தொகுதிகளைத் தருவதாக முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

காங்கிரஸை சேர்க்க கூடாது- திமுவில் எதிர்ப்பு
இதற்கிடையில் தேமுதிகவுடன் கூட்டணி சேரத் தயாராக இருக்கும் பெரும்பாலான திமுகவின் தலைமை நிர்வாகிகள், காங்கிரஸ் கூட்டணியை எதிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் வானில் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ?

பாஜகவுடன்தான் பேச்சுவார்த்தை- தேமுதிக
இப்படி தேமுதிக- திமுக கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும் காங்கிரஸ் இணைகிறது என்றும் கூறப்பட்ட நிலையில் இதுநாள் வரை எதுவுமே பேசாமல் இருந்த தேமுதிக திடீரென இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் குழப்பத்தை உருவாக்கி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications