அரசு பஸ் இல்லை.. ஆட்டோவில் 13 கிமீ. தூரம் வெற்றிலை கட்டுக்களாக மாறிய மாணவர்கள்.. மானாமதுரையில் அவலம்
மானாமதுரை: மானாமதுரையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அரசுப் பேருந்து சேவை இல்லாததால் தினந்தோறும் பள்ளிக்கு ஷேர் ஆட்டோவில் செல்ல ரூ 40 செலவிட நேருகிறது. அதிலும் வெற்றிலை அடுக்கியது போல் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார்.
அது போல் கல்லூரி மாணவர்களும் இலவச பயணம் மேற்கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஏற்கெனவே பெண்கள், மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கான உதவியாளர் ஒருவர், திருநங்கையர்கள் நகர பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்ற ஒரு அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஆட்டோக்கள்
இந்த நிலையில் இலவச பயணம் என்பதால் மேற்கண்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஆட்டோக்களில் பெரும்பாலானோர் பயணிப்பதில்லை என ஆட்டோ டிரைவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதனால் நகர பேருந்துகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களும் இலவசமாக பயணிப்பதால் மேலும் மேலும் கூட்டம் அதிகரித்துள்ளது.

கொரோனா 3ஆவது அலை
தமிழகத்தில் கொரோனாவின் 3ஆவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் சமூக இடைவெளி இல்லாமல் அரசு பேருந்துகளில் இந்த அளவுக்கு கூட்டம் அதிகரித்துள்ளதை கண்டு மருத்துவ நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இவ்வாறு அரசு பேருந்துகளில் அதிக கூட்டம் பயணிக்கும் நிலை ஒரு புறம் இருந்தாலும் , கிராமப்புறங்களில் நிலைமையோ வேறு மாதிரியாக உள்ளது.

கிராமங்கள்
இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட போதிலும் அரசு பேருந்து சேவையே இல்லாமல் பல கிராமங்கள் அல்லாடி வருகின்றன. தற்போது சொந்த காசை போட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மானாமதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் அரசு பேருந்து சேவையே இல்லாத நிலை உள்ளது.

ஷேர் ஆட்டோ
இதனால் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் தினம்தோறும் ஷேர் ஆட்டோக்களில் 13 கிமீ, தூரம் ரூ 40 செலவிட்டு செல்லும் நிலை உள்ளது. இந்த மாணவர்களின் பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள் என்பதால் இது இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் என கல்வியாளர்கள் அச்சமடைகிறார்கள். இலவச பேருந்து பயணம் என்பது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய பயனளிக்கக் கூடியதுதான் ஆனாலும் இது போன்ற கிராமப்புறங்களில் பேருந்து சேவையை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications