"மெரினா பீச்சில் (டிஜிபி அலுவலகம் எதிரே) மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சி": சொல்வது தருமபுரி போலீஸ்!
தருமபுரி: சென்னை மெரினா கடற்கரையில் அதாவது தமிழக காவல்துறை தலைவர் அலுவலகம் இருக்கும் இடத்துக்கு எதிரே மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சி அளித்தனர் என்று தருமபுரி போலீசார் எப்.ஐ.ஆர்.- ஒன்றில் குறிப்பிட்டிருப்பது திடுக்கிட வைத்துள்ளது.
தருமபுரியில் ஜூலை 4-ந் தேதி காதல் விவகாரத்தில் உயிரிழந்த இளவரசனின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்னதாக நத்தம்காலனி மக்கள் சிலரை போலீசார் கைது செய்தனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அனைவருக்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தருமபுரி போலீசார் தெரிவித்தனர். இவர்கள் மீது போடப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த முதல் தகவல் அறிக்கையில், 2012 தர்மபுரி தாக்குதலுக்குப் பின் நத்தம் காலனிக்குப் பலரும் வந்து 'ஆறுதல்' சொல்லிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளான காளிதாஸ், சந்திரா ஆகியோர் அந்த மக்களிடம் 'ஆயுதப்பயிற்சி மேற்கொள்வதும், தீவிரவாத இயக்கங்களின் பின்னணியோடு செயல் படுவதுமே உங்களுக்குப் பாதுகாப்பு' என்று சொல்லி உள்ளனர்.
அந்த அடிப்படையில் 'துடி' அமைப்பின் மூலம் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 50 பேர்களுக்கு அரக்கோணம், சென்னை மெரினா கடற்கரை, கந்தன் குட்டை பகுதிகளில் ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
தருமபுரி போலீசார் சொல்லுகிற "மெரினா கடற்கரை" என்பது தமிழக காவல்துறையின் தலைவர் (டிஜிபி) அலுவலகம் இருக்கும் இடத்துக்கு எதிரேதான் இருக்கிறது. அங்கே எப்படி ஆயுத பயிற்சி பெற முடியும்?
இதிலிருந்தே தருமபுரி போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications