ரூ.200 கோடி செலவில் திமுகவின் ஆள் இழுப்பு ஆபரேசன்... திருப்பூரில் பொங்கிய வைகோ

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: மதிமுகவினரின் மாவட்ட செயலாளர்களையும், பசையுள்ள நிர்வாகிகளையும் குறிவைத்து திமுகவில் இழுத்து வருவதால் மதிமுக வட்டாரம் கலகலத்து வருகிறது. மதிமுகவின் முக்கிய புள்ளிகளை வளைக்க திமுக 200 கோடி ரூபாய் களமிறக்கியுள்ளதாகவும் இதன் பின்னணியில் ஸ்டாலினை முதல்வராக முன்நிறுத்துபவர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த வைகோ, மதிமுகவை கருவறுக்க நினைக்கும் கருணாநிதியுடன் நான் எப்படி கைகோர்ப்பேன்? எனக்கு அவர் இழைத்த கொடுமைகள் ஒன்றா? இரண்டா? நான் எப்படி அவருடன் தேர்தலில் கூட்டணி சேர முடியும் என்று கண்கள் சிவக்க திருப்பூர் மாநாட்டில் கொந்தளித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருபோதும் கூட்டணி சேரமாட்டோம் என்று கோவில்பட்டியில் வைகோ அறிவித்து திமுகவினருக்கு மட்டுமல்லாது மதிமுகவினரையும் அதிரவைத்தது. இதே எண்ணத்துடனேயே உயர்மட்டக்குழு கூட்டத்திலும் வைகோ பேசினார்.

இந்த பேச்சின் முக்கிய அம்சங்களைக் கேட்ட ஸ்டாலின், மதிமுகவினரை இழுக்கும் முயற்சியை உடனடியாக தொடங்கியதாக தெரிகிறது. பேசி பேசியே பாலவாக்கம் சோமுவை படியவைத்தனர். திருப்பூர் மாநாடுக்கு முன்பாகவே பத்து மாவட்ட செயலாளர்களையாவது இழுத்து அதிர்ச்சி வைத்தியம் தரவேண்டும் என்று முடிவு செய்திருந்தாராம் வைகோ. மாநாடு முடியட்டும் என்று சிலர் கூறவே இணைப்பு ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூரில் திகு திகு

திருப்பூரில் திகு திகு

பாலவாக்கம் சோமு திமுகவில் இணைந்தது ஒருபக்கம் சலசலப்பை ஏற்படுத்தினாலும் திருப்பூர் மாநாட்டில் உற்சாகமாவே பங்கேற்றார் வைகோ. முக்கியமாக ஈரோடு கணேசமூர்த்தி பேசியது மதிமுகவினரை யோசிக்க வைத்துள்ளது. வாக்களிக்கத் தெரியாத மக்கள், கூட்டணி அமைக்கத் தெரியாத கட்சிகள், இதெல்லாம் இன்றைய ஜனநாயகத்தின் அவலம். நம் கட்சி முன்னெடுக்காத போராட்டங்களே இல்லை. மிகவும் விசுவாசமான தொண்டர் பலமும் இருக்கிறது. ஆனாலும் ஏதோ குறையிருக்கிறது என்றார் கணேசமூர்த்தி. ஆர்.டி மாரியப்பனும் இதை வழிமொழியும் வகையில் பேசி வைகோவை வெறுப்பேற்றினார்.

வைகோவிற்கு தெம்பு

வைகோவிற்கு தெம்பு

கணேசமூர்த்தி, மாரியப்பன் ஆகியோரின் பேச்சு வைகோவிற்கு நெருடலை ஏற்படுத்தினாலும் மல்லை சத்யாவின் பேச்சு தெம்பையும் ஆறுதலையும் அளித்தது. திராவிட இயக்கத்தை வழிநடத்தும் ஒரே இயக்கம் ம.தி.மு.க-தான். பாலவாக்கம் சோமு தி.மு.க.வுக்கு தாவிவிட்டார். என்ன நடந்தது காஞ்சியில்? எதுவும் நடக்கவில்லை. அவரோடு உடன்கட்டை ஏற யாரும் தயாராக இல்லை. கலைஞர் அவர்களே, ஏன் இவ்வளவு தள்ளாட்டம்? கட்சி நடத்த உங்களுக்கு ஆள் இல்லையா? அப்படியென்றால், தி.மு.க-வை கலைத்துவிட்டு ம.தி.மு.க-வுடன் இணைத்துவிடுங்கள். எங்களுக்குக் காலம் இருக்கிறது. வைகோவின் ‘டர்ன்' எனப்படும் அந்தக் காலத்தில், தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ம.தி.மு.க-வில் இணைகிறார்கள் என்ற செய்தி வரப்போகிறது. அதைக் காண்பதற்கு நீங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுதலாக இருக்கிறது" என்று தி.மு.க-வையும், கருணாநிதியையும் கடுமையாக தாக்கி பேசி வைகோவை கை தட்ட வைத்தார்.

மதிமுகவை அழிக்க கடிதம்

மதிமுகவை அழிக்க கடிதம்

நாம் எத்தகைய ஆயுதத்தை ஏந்தவேண்டும் என்பதை நம்மை அழிக்க நினைக்கும் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என பேச்சைத் தொடங்கினார் வைகோ. தி.மு.க-வில் இருந்து நச்சு ஓலை தயாரிக்கப்பட்டு, ம.தி.மு.க நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளனர். அதை நானும் படித்தேன். அதில், ‘கட்சியை சுடுகாட்டுக்குக் கொண்டு சேர்த்துவிடுவேன்' என எழுதியிருக்கிறார்கள். ம.தி.மு.க தொண்டனிடம் இருந்து இதுபோன்ற எழுத்துகள் வராது. ஒரு குற்றத்தை வாடிக்கையாகச் செய்பவர், அதே மாதிரிதான் அடுத்த குற்றத்தையும் செய்வார். தடயங்களைவைத்து அவர் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும் என்றார்.

போட்டி மதிமுக

போட்டி மதிமுக

1991-ம் ஆண்டு நவம்பர் முதல் வாரம் என்னையும், என் தம்பியையும் பற்றி தவறான கடிதம் எழுதி இதேபோன்று அனைத்து நிர்வாகிகளுக்கும் அனுப்பியிருந்தார்கள். கடிதம் அனுப்பியது தலைவரும், தலைவரின் மகனும்தான் என அப்போதே நான் சொன்னேன். செயற்குழுவில் எனக்கு எதிராய் ஒன்றரை மணி நேரம் பேசினார். நான் 37 நிமிடங்கள் அதற்குப் பதிலளித்தேன். மொத்த செயற்குழுவும் என் பக்கம் நின்றது. அதன்பின்னர் 2004-க்குப் பின்னர் போட்டி ம.தி.மு.க-வை ஆரம்பித்து தாயகத்தைக் கைப்பற்ற கலைஞர் நினைத்தார். அதிலும் தோற்றுப்போனார். அதைத்தான் இப்போதும் அவர் செய்திருக்கிறார்.

கூட்டணி சேர வேண்டுமா?

கூட்டணி சேர வேண்டுமா?

இத்தனைக்குப் பிறகும் நான் ஏன் தி.மு.க-வுடன் கூட்டணி சேர வேண்டும்? ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் கலைஞர் என்னிடம் போனில் பேசினார். ‘பேரனுக்குத் திருமணம். ஸ்டாலின் வந்து அழைப்பிதழ் தருவார். கட்டாயம் வர வேண்டும்' என்றார். ஸ்டாலின் வந்தார். அழைப்பிதழ் கொடுத்தார். கல்யாணத்துக்குச் சென்றேன். பேசினேன்.ஆனால் அவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.

குழிபறிப்பு வேலை

குழிபறிப்பு வேலை

பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கக் கட்டடம் ம.தி.மு.க-வின் சொத்து. மோசடியாக கையெழுத்துப் போட்டு அதை தி.மு.க-வினர் அபகரித்துக்கொண்டனர். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அதில் நாங்கள் வென்றோம். கல்யாண வீட்டுக்குப்போன அந்த நேரத்தில்தான், உயர் நீதிமன்றத்தில் அதற்குத் தடைபெற்றார்கள். இதற்குப் பிறகும் தி.மு.க-வோடு கூட்டுவைக்க வேண்டும் என்றால் எப்படி?

திமுகவின் ஊழல்கள்

திமுகவின் ஊழல்கள்

தி.மு.க., அ.தி.மு..க. செய்யும் ஊழல்கள், தவறுகள், குடும்ப அரசியல், 2ஜி இவை எல்லாம் மிகப் பெரிய ஊழல்கள். பாலோடு கலக்கும் விஷம் மொத்தப் பாலையும் விஷமாக்கும். இந்த பழிபாவத்துக்கு நாம் ஆளாகும்போது, அது, திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எளிதாகிவிடும்.

அரவான் களப்பலி

அரவான் களப்பலி

22 ஆண்டுகளாக என்னோடு நகமும் சதையுமாக இருந்தவர் பாலவாக்கம் சோமு. அவர் ஏன் தி.மு.க-வில் சேர்ந்தார்? நான் யோசித்துப் பார்த்தேன். மக்கள் நல கூட்டியக்கம் என அறிவித்த நாளில் இருந்து ம.தி.மு.க-வை எப்படி உடைப்பது என தி.மு.க. தலைமை திட்டமிட்டது. பலரை அணுகினார்கள். மகாபாரதத்தில் அரவான் பலியானதுபோல, தன்னைத்தானே பலியிட்டு கட்சியைக் காப்பாற்றி இருக்கிறார் பாலவாக்கம் சோமு. நம் கட்சியை அழிக்க தி.மு.க மீண்டும் முயற்சிக்கிறது என்பதை நம் கட்சியினருக்கு உணர்த்த இந்தத் தியாகத்தை பாலவாக்கம் சோமு செய்திருக்கிறார். அவர் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை

நம்பிக்கைதான் வாழ்க்கை

தி.மு.க., அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் அவர்களின் பழிபாவங்களுக்கு நாமும் ஆளாக நேரிடும். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் மக்கள் நல கூட்டியக்கத்தில் ம.தி.மு.க உறுதியாக இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. அவர்கள் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இந்தக் கூட்டணி வெற்றி பெறும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த அணிக்கு வரலாம். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இப்போது அறிவிக்கப் போவதில்லை. தேர்தல் வெற்றிக்குப்பின் அறிவிப்போம். தமிழக அரசியலை சரியான திசையில் ம.தி.மு.க எடுத்துச் செல்லும் என்றார் வைகோ.

தகரடப்பாக்கள்

தகரடப்பாக்கள்

திருப்பூர் மாநாட்டில் கருணாநிதியையும், திமுகவையும் தாக்கி பேசிய வைகோ, தகரடப்பாக்கள் என்று சீமானையும் தாக்கினார் . நம்பவைத்து கழுத்தறுப்பதில் கை தேர்ந்தவர் கருணாநிதி, இது நமக்கு முக்கியமான நேரம் என்று மதிமுகவினருக்கு உணர்த்திவிட்டு அமர்ந்தார் வைகோ. ஆனாலும் திமுகவின் ஆள் இழுப்பு ஆபரேசன் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இன்னும் எத்தனை மாவட்ட செயலாளர்களை இழுக்கப் போகிறார்களோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+