80 வயதில் தட்டுத்தடுமாறி நான் வந்திருக்கிறேன்... எடப்பாடி பழனிசாமி ஏன் இதை செய்யவில்லை -துரைமுருகன்
முல்லை பெரியாறு: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிமுக அறிவித்துள்ள போராட்டத்தை பார்த்து நாடே கிடு கிடுங்குவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார்.
80 வயதில் படிக்கட்டுகள் கூட ஏற முடியாத சூழலில் தட்டுத் தடுமாறி இன்று முல்லை பெரியாறு அணைக்கு தாம் வந்திருப்பதாகவும் பொதுப்பணித்துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு முறை கூட அணையை நேரில் பார்வையிடாதது ஏன் வினவினார்.

எடப்பாடி பழனிசாமியாவது சேலத்துக்காரர் என்பதால் பரவாயில்லை என்றும், தேனியில் இருக்ககூடிய ஓ.பன்னீர்செல்வம் முல்லை பெரியாறு அணையை அதிகாரத்தில் இருந்த போது ஆய்வு செய்ய செல்லாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்.
முல்லை பெரியாறு அணையை இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் துரைமுருகன் முதல் நாள் ஆய்வை பிற்பகல் 3 மணிக்கு நிறைவு செய்தார். முதல் நாள் ஆய்வு குறித்து முல்லை பெரியாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேபி டேம் கட்டுவதற்கு இடையூறாக உள்ள 3 மரங்களை அப்புறப்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் பேசியிருப்பதாகவும் மரங்களை அப்புறப்படுத்தும் விவகாரத்தில் கேரள அரசின் துறைகள் ஒன்றின் மீது ஒன்று கை நீட்டி கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவித்தார்.
கேரள அரசும் தமிழக அரசும் அந்நியோன்யமாக இருந்தால் தால் இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எட்ட முடியும் என்றும் முல்லை பெரியாறு அணையை கேரள அமைச்சர்கள் ஆய்வு செய்ததில் தவறேதும் இல்லை எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் வந்த போது இருந்த ஸ்பீட் போட் தான் இன்றும் பயன்பாட்டில் இருப்பதாகவும், நல்வாய்ப்பாக தாம் ஆய்வு செய்யும் போது அந்த போட் நின்றுவிடவில்லை எனவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னைக்கு சென்ற பின்னர் முதல் பணியாக இரண்டு ஸ்பீட் போட்களை முல்லை பெரியாறு அணை பகுதியை பார்வையிட வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார். அமைச்சர் துரைமுருகனுடன் அமைச்சர்கள் மூர்த்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, ஆகியோர் உடனிருந்தனர்.
இதனிடையே இனி அடுத்தடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அணைகளில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கு அடுத்துச் செல்லவிருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழகம் கேரளா இடையேயான முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு பினராயி விஜயன் ஆட்சிக்காலத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என தனக்கு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
Recommended Video
முல்லை பெரியாறு அணை குறித்து திமுகவை விமர்சிக்கும் அதிமுக, கடந்த 10 ஆண்டுகாலத்தில் ஒரு அமைச்சரை கூட அணையை ஆய்வு செய்ய அனுப்பி வைக்காதது ஏன் என்றும் இந்த விவகாரத்தை பற்றி பேச அதிமுகவுக்கு எந்த உரிமையும் கிடையாது எனவும் துரைமுருகன் பதிலடி கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications