இரு ஊழல் அணிகள் ஒன்றிணைய துணை நின்றுள்ளார் மோடி- ஸ்டாலின் அதிரடி தாக்கு
சென்னை: இரு ஊழல் அணிகள் ஒன்றிணைய துணை நின்றுள்ளார் மோடி. ஊழலை ஒழிப்பேன் என்ற மோடி, ஊழல் அணிகளை ஒன்றாக்கியுள்ளார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளாசியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
ஊழலுக்கு எதிரான போரை நடத்துவதாக சுதந்திர தினத்தில் வீர உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் தமிழகத்தில் ஊழல் அணிகள் ஆட்சி பொறுப்பில் அமர உறுதுணையாக இருந்து வாழ்த்தும் தெரிவித்துள்ளார் மோடி.

இரு ஊழல் அணிகள் ஒன்றிணைய துணை நின்றுள்ளார் மோடி. ஊழலை ஒழிப்பேன் என்ற மோடி, ஊழல் அணிகளை ஒன்றாக்கியுள்ளார் என்பதை வைத்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் 19 எம்.எல்.ஏக்கள் மட்டுமில்லாமல் கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகியோரும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
முன்பு, 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஓபிஸ் கடிதம் அளித்த போதே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எனவே தமிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் திமுக உரிய முடிவை எடுக்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு பிறகுநடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்திற்கு, பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். பன்னீர்செல்வத்தை போனில் அழைத்து வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications