சென்னை: மோனோ ரயில் திட்டம்... வருமா? வராதா?
சென்னை: சென்னை மோனோ ரயில் திட்டத்துக்கான கட்டுமான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், திட்டப் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டில் பதவியேற்ற அதிமுக அரசு, சென்னை மாநகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்துக் கட்ட மைப்பு வசதியை மேம்படுத்தவும் மோனோ ரயில் திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டது.
இத் திட்டத்தை இதற்கு முந்தைய ஆட்சியில் அறிமுகம் செய்ய அதிமுக அரசு திட்டமிட்டு, அப்போது கைவிடப்பட்டது. இதற் கிடையே, அடுத்து வந்த திமுக ஆட்சி மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடங்கியது. அப்பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

2011 அதிமுக ஆட்சியில்
இந்நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்த தொடங்கியது. இதனை செயல்படுத்தும் பொறுப்பு, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

3 ஆண்டுகளாக திட்டம்
இதற்காக மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் மோனோ ரயில் பிரிவு தனியாக தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

நான்கு மூன்றானது
முதலில் பூந்தமல்லி-கத்திப்பாரா, பூந்தமல்லி-வடபழனி, வண்ட லூர்-வேளச்சேரி மற்றும் வண்டலூர்-புழல் ஆகிய 4 வழித் தடங்களில் மோனோ ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில், 3 தடங்களில் மட்டும் திட்டத்தினை செயல்படுத்த சர்வதேச டெண்டர் கோரப்பட்டது.

டெண்டர் ரத்து
அதில் சில குளறுபடிகள் நேர்ந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அதனை தமிழக அரசு ரத்து செய்தது. இந்நிலையில், மோனோ ரயில் திட்டத்துக்கான நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான டெண்டர் மீண்டும் கோரப்பட்டது.

கூடி கூடி பேசியும்
இதற்கிடையே, இந்த திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கும், துரிதப்படுத்துவதற்கும் தமிழக அரசு ஒரு உயர்மட்டக் குழுவினை அமைத்தது. அந்த குழுவுக்குத் தலைமைச் செயலாளர் தலைவராகவும், போக்குவரத்துத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மீண்டும் ரத்தான டெண்டர்
அந்தக் குழுவினர், அவ்வப்போது கூடி மோனோ ரயில் டெண்டர் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து, டெண்டர் நடைமுறைகள் ஆரம்பக் கட்டத்தைத் தாண்டி இறுதிக்கட்டத்தை அடைய இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த டெண்டரும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

பின்வாங்கிய நிறுவனம்
டெண்டரில் இடம் பெற்றிருந்த ஒரு நிறுவனத்தின், கூட்டு நிறுவனம் பின்வாங்கியதே அதற்குக் காரணம் எனக் கூறப் படுகிறது. இதனால் ஒரு நிறுவனம் மட்டுமே இறுதிக்களத்தில் நின்றது. தேவையற்ற சர்ச்சை யைத் தவிர்ப்பதற்காக அந்த டெண்டரும் ரத்து செய் யப்பட்டது.

மூன்றாவது முறையாக
இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் மீண்டும் முன்றாவது முறை யாக மோனோ ரயில் திட்டத்துக்காக புதிய டெண்டர் கோரப்பட் டுள்ளது.

2 வழித்தடங்களில் மட்டும்
பூந்தமல்லி-கத்திப்பாரா மற்றும் பூந்தமல்லி-வடபழனி ஆகிய இரு தடங்களில் மட்டும் இத்திட்டத்தினை செயல்படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

உறுதியாக இயக்குவோம்
மோனோ ரயிலை தமிழகத்தில் இயங்கச்செய்வதில் உறுதியாக இருப்பதாக அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான முதல் கட்ட டெண்டர் விரைவில் இறுதியாகிவிடும். அதன்பிறகு, "ஆர்எப்பி" (தொழில்நுட்பத் தகுதியை ஆராய்வதற்கானது) மற்றும் "பினான்சியல் பிட்டிங்" (திட்டச்செலவை குறிப்பிடுவது) ஆகிய நடைமுறைகள் வேகமாக முடிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

ஜூலையில் இறுதி
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, டெண்டர் நடை முறைகள் துரிதப்படுத்தப்பட்டு, ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மோனோ ரயில் கட்டுமான நிறுவனம் இறுதி செய்யப்பட்டுவிடும். இதைத் தொடர்ந்து கோவையிலும் விரைவில் இத்திட்டத்தைச் செயல் படுத்த நடவடிக்கைகள் தொடங்கி விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications