இப்படி ஒரு மருமகள் மட்டும் எல்லாருக்கும் கிடைச்சா எப்படி இருக்கும்?
மாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகளும் இறந்துவிட்டார்.
Recommended Video

திருச்சி: இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மருமகளா?
வரதட்சணை கொடுமை, மாமியார் சித்ரவதை, ஸ்டவ் வெடித்து மருமகள் பலி... இதெல்லாம் ஒருகாலத்தில் பத்திரிகைகளில் தலையாய இடம் பிடித்தன. இந்த செய்திகளை தாங்கிவந்த பத்திரிகைகளையும் முண்டியடித்து கொண்டு வாங்கி படித்த கூட்டமும் தமிழகத்தில் இருந்தனர்.
ஆனால் காலம் மாற மாற... இளம் பெண்கள் கல்வி கற்க... கற்க... இந்த நிலைமைகள் இப்போது மலையேறி கொண்டு வருகிறது. அதோடு மனித உறவுகளிலும் முதிர்ச்சி தென்பட்டு சர்ச்சைகள், சண்டைகள் பெருமளவு சாதுர்யமாக தவிர்க்கப்பட்டும் வருகிறது.

குழந்தை இல்லை
அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் திருச்சியில் நடந்துள்ளது. புத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் ஜெயமேரி. வயது 90. இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். ஆல்பர்ட், ஜேம்ஸ் என்ற 2 மகன்கள் மட்டும் உள்ளனர். இரண்டு மகன்களுக்கு நல்ல பொறுப்பான பணி. ஆல்பர்ட் காதிகிராப்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜேம்ஸ் சி.இ. பள்ளி ஒன்றின் தாளாளராக உள்ளார். ஆல்பர்ட்டின் மனைவி பெயர் சுசிலா. இவருக்கு வயது 60. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

உயிரிழந்த ஜெயமேரி
இந்தநிலையில் ஜெயமேரிக்கு அதிகமாக வயசாகிவிட்டதால், உடம்பு ரொம்பவே மோசமடைந்தது. அதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை கொடுத்தும், உடல்நலம் ஒத்துழைக்கவில்லை. அதனால், அவர் உயிரிழந்துவிட்டார். எனவே அவரது உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, இந்த தகவல் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் சொல்லப்பட்டது.

மிரண்டு நின்ற சுசிலா
தகவல் அறிந்து பதறியடித்து கொண்டு ஓடிவந்தார் வீட்டு மருமகள் சுசிலா. மாமியாரின் உடலை கண்டு கதறி புரண்டு அழுவார் என்று பார்த்தால், அழவே இல்லை. கண்களில் நீர் மட்டும் கன்னங்களில் வழிய வழிய, மாமியாரின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்து நின்று கொண்டே இருந்தார். அங்கு இருந்தோர் எல்லோரும் சுசிலாவையே மிரண்டு பார்த்தனர். சிறிது நேரம் உறைந்து நின்ற சுசிலா அப்படியே மயங்கி சரிந்து விழுந்தார்.

சுசிலாவின் உயிர் பிரிந்தது
உடனடியாக அங்கிருந்தவர்கள் சுசிலாவை தூக்கி காரில் போட்டுக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனாலும் பலனில்லை. ஏற்கனவே சுசிலா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். மாமியாரை உடலை கண்டு விறைத்து, உறைந்து நின்றாரே, அப்போதே சுசிலாவின் உயிரும் பிரிந்து விட்டது.

எலியும்? பூனையும்?
ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரண்டு எதிர்பாராத மரணங்கள்.. அந்த சுற்று வட்டார பகுதி மக்களால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. மாமியார் உடல் வைக்கப்பட்டிருந்த அதே சி.இ. பள்ளியில் மருமகளின் உடலும் வைக்கப்பட்டிருந்ததை கண்டு மனம் வெடித்து மக்கள் கதறி அழுதனர். மாமியார் மருமகள் என்றாலே எலியும் பூனையும் என்பதை சுக்குநூறாக உடைத்தெறிந்து சென்றுவிட்டார்கள் இவர்கள் இருவரும்!












Click it and Unblock the Notifications