போலி நகைகளை கண்டறிந்ததால் கொலை - நாகை வங்கி செயலாளர் கொலையில் திடீர் திருப்பம்!
கீழ்வேளூர்: நாகையில் போலி நகையைக் கண்டறிந்ததால் வங்கிச் செயலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ள கீழ வெண்மணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக வேலை செய்து வந்த காமராஜ் கடந்த 28 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். மேலும் வங்கியில் இருந்த நகை மதிப்பீட்டாளர் கணபதியை நாற்காலியில் கட்டி போட்டு விட்டு வங்கியில் இருந்த 3 கோடி மதிப்புள்ள நகை, ரூபாய் 4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக தனிப்படையினர் விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த கொலை, கொள்ளையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் கணபதிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய கணபதியின் நண்பர் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை லட்சுமி புரத்தை சேர்ந்த பஞ்சாட்சரமும் கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டின் செப்டிங் டேங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நகை பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சில நகைகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட பஞ்சாட்சரம் திருத்துறைப்பூண்டியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அவரிடம் வரும் போலி நகைகளை கணபதியிடம் கொடுத்து கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.
இவ்வாறு மோசடி செய்த பணத்தை இருவரும் பங்குபோட்டுள்ளனர். இதற்கிடையே நகைகளை சரி பார்த்த செயலாளர் காமராஜ் போலி நகைகள் கண்டு பிடித்தார். இது தொடர்பாக கணபதியிடம் விசாரணை நடத்திய அவர் மோசடி செய்த தொகையை சங்கத்தில் ஒப்படைக்குமாறும், இல்லாவிட்டால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
இதனால் அவரை கொல்ல திட்டமிட்ட கணபதி தனது நண்பர் பஞ்சாட்சர உதவியுடன் காமராஜை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட பஞ்சாட்சரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
