நாடி நரம்பெல்லாம் அதிமுக ரத்தம் ஓடுற ஒருத்தராலதான் இப்படி செய்ய முடியும்.. இதயத்தை தொட்ட தொண்டர்
நெல்லை: நீ பேசு தலைவா நான் கேக்குறேன்.. என்று 'நாடி நரம்பெல்லாம் அதிமுக ரத்தம் ஓடும் தொண்டர் ஒருவர், நெல்லை பாளையங்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள் பேசியதை கொட்டும் மழையில் அமர்ந்து கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தலைவர்கள் பேசும் போது தொண்டர்கள் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசிய அந்த காலம்.. தலைவர்கள் வருகைக்காகவே பல மணி நேரம் மக்கள் காத்திருந்திருக்கிறார்கள். மாலையில் வரப்போகும் தலைவருக்காக காலை 6 மணியில் இருந்தே உட்கார்ந்து இருந்து, இதே தலைவர் அங்கு வந்துவிட்டார். இதோ தலைவர் இங்கு வந்துவிட்டார், என்று கூறுவார்கள். அவர் கிட்டே வந்த உடன் உற்சாகமாக கைகொடுக்க ஓடுவார்கள். அவர் கை கொடுத்தாலே பல நாள் நெகிழ்ந்து போவார்கள். இதெல்லாம் 70களில், 80களில், 90களில் ஏன் 2000களில் கூட இப்படித்தான் இருந்தது.

ஆனால் 2000த்திற்கு பிறகு அப்படியே நிலைமை மாறியது. பணம் கொடுத்தால் தான் கூட்டங்களுக்கு தலைவர்களை பார்க்க கட்சியினர் வருவார்கள் என்ற நிலை உருவானது. பணம் கொடுக்காமல் எந்த கூட்டங்களுக்கும் கூட்டத்தை சேர்க்க முடியாது என்ற நிலை மெல்ல மெல்ல உருவானது. இன்றைய சூழலில் கிளைக்கழக கூட்டம் என்றாலும் சரி, பெரிய தலைவர்களின் கூட்டம் என்றாலும் சரி, கண்டிப்பாக பணம் கொடுத்தால் தான் கூட்டம் சேர்க்க முடியும் என்கிற நிலையே உள்ளது.
இந்நிலையில் அபூர்வமாகவே சில நேரங்களில் மக்கள் கூட்டம் தலைவர்களுக்கு அதிக அளவில் கூடுகிறது. இந்நிலையில் நெல்லை பாளையம் கோட்டை சட்டமனற தொகுதிக்கு உட்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் 52வத ஆண்டு தொடக்க விழா நடந்தது. இந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் மேடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தொண்டர்கள் பலர் அமர்ந்து பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென கனமழை பெய்தது. மழை பெய்ய தொடங்கியதுமே மக்கள் ஒவ்வொருவராக எழுந்து சென்றனர்.
அப்போது ஒரு தொண்டர் மட்டும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்தார்,.நாடி நரம்பெல்லாம் அதிமுக ரத்தம் ஓடுற ஒருத்தராலதான் இப்படி உட்கார்ந்து கேட்க முடியும் என்று அங்கிருந்தவர்கள் அதை பற்றி பேசி சிலாகித்தனர். அதிமுக தலைவர்களுமே அந்த தொண்டரின் செயலால் நெகிழ்ந்து போனார்கள்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications