கடலூரில் 25% கமிஷன் பதுக்கிவிட்டே நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது... விஜயகாந்த் பகீர் புகார்
சென்னை: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையானது 25% கமிஷனாகப் பெற்ற பின்னரே வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இயற்கை வளங்களைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல், ஏரிகள், குளங்கள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்படுவதும், அதில் கட்டிடங்கள் கட்டப்படுவதும், நீர்வரும் வழிகள் அடைக்கப்படுவதும், ஆறுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணலை அள்ளிக்கொண்டு செல்வதும், பெரும்பாலான மரங்களை வெட்டுவதும் போன்ற காரணங்களால்தான் இதுபோன்ற பேரழிவுகள் தமிழகத்தில் தொடர்கிறது.

இதுபோன்ற மனித செயல்களால் இயற்கையை தொடர்ந்து அழித்து வந்ததனால், தற்போது இயற்கை நம்மை அழிக்கத்துவங்கியுள்ளது. அதனால் பாதிப்பவர்கள் முழுக்க, முழுக்க பொதுமக்கள்தான். ஆந்திர மாநிலம் ஐந்து மாதகாலத்தில் 174 கிலோமீட்டர் தூரம் கால்வாய் அமைத்து, கோதாவரி - கிருஷ்ணா நதி நீர் இணைப்பை செய்து நீர் ஆதாரத்தில் தன்னிறைவு அடைந்துள்ளது. ஆனால் காவிரி மற்றும் முல்லை பெரியாறு நீருக்காக கர்நாடக, கேரள மாநிலங்களிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
மழை நீரை சேமிப்பதற்குரிய கட்டமைப்பையும், நதிநீர் இணைப்பையும் முன்பே செய்திருந்தால் தற்போது பெய்துள்ள மழை நீர் வீணாக சென்று கடலில் கலப்பதை தடுத்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தியிருக்கலாம், நீருக்காக அண்டை மாநிலங்களை தமிழகம் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்திற்கு பின்பு பெரிய அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர் ஆதாரங்கள் புதியதாக உருவாக்கப்படவில்லை. அதன் விளைவாக பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும், மதுராந்தகம், செம்பரம்பாக்கம், பூண்டி போன்ற ஏரிகள் நிரம்பி வழிந்தும், எவ்வித பலனும் இல்லாமல், நீர் முழுவதும் கடலில் சென்று வீணானது. அணைகள் கட்டியும், ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தியும் இருந்தால் நீரையும் சேமித்திருக்கலாம்.
கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் முறையாக போய்ச் சேரவில்லையென்றும், லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடுவதாகவும், நிவாரணத் தொகையில் 25 சதவிகிதம் வரை கமிஷனாக பெற்ற பிறகே நிவாரணத் தொகை வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து எவ்வித முறைகேடும் இல்லாமல், நிவாரண பணிகளும், உதவிகளும் வழங்கவேண்டும். நிவாரண பணிகளை கட்சிபேதமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications