தீவிரமடையும் டெங்கு… சென்னையில் 49 பேர் பாதிப்பு - நாம் செய்ய வேண்டியது என்ன?
சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 49 பேர் பாதிக்கப்பட்டதாகவும், கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 96 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் புள்ளி விபரம் தெரிவிக்கின்றனர்.
இந்தப் புள்ளி விவரத்தைவிட அதிக அளவிலான மக்கள், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு காய்ச்சலைப் பற்றிய உண்மைகள் மறைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அடையாறு மண்டலத்தில், கடந்த இரண்டு நாட்களில், டெங்கு அறிகுறியுடன் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எட்டு பேர் பெண்கள். 10 வயதுக்கு குறைவான ஆறு பேரில், மூன்று பேர் ஒரு வயது குழந்தைகள். அடையாறு, காமராஜர் அவென்யூவில் ஒரே வீட்டில் இரண்டு பேர், தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாணவர்களுக்கு பாதிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி.மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஐ.ஐ.டி.யில், ஒரு மாதத்தில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களில், பலர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்; சிகிச்சை பெற சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
மர்மக்காய்ச்சல்
தினந்தோறும் ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மர்மக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு மரணம் அடையும் குழந்தைகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
5 ஆயிரம் பேர் பாதிப்பு
சென்னையில் அண்ணா நகர், மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஆனால் இவை எல்லாம் டெங்கு காய்ச்சல் அல்ல என்பது மாநகராட்சி அதிகாரிகளின் கூற்று.
தமிழகத்தில் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 120 பேரும், சேலம் மாவட்டத்தில் 38 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி வரையிலான கணக்கெடுப்பின்படி 106 பேரும், கோவை மருத்துவமனையில் 8 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்சலில் இறப்பவர்களை மர்மக் காய்ச்சலில் இறந்துவிட்டதாகச் சொல்லும்படி ஊழியர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தகவல்கள் மறைப்பு
டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலக சுகாதாரத் துறையினருக்கு இமெயில் மூலம் தகவல்களை அனுப்பியும், இந்தத் தகவல்களை மாநகராட்சியின் சுகாதாரத் துறையில் உள்ள சில உயர் அதிகாரிகள் மூடிமறைத்துவிட்டதாக தெரிகிறது. கொசு ஒழிப்பிலும் அவர்கள் அக்கறை செலுத்தாத காரணத்தினாலேயே டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தமிழகத்தில் மற்ற பகுதிகளைவிட சென்னையில் அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.
சென்னையில் பாதிப்பு
அதே நேரத்தில் டெங்கு பாதிப்பு பற்றி மறைக்கவில்லை என்றும், சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 49 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.
உறுதி செய்யப்பட்ட காய்ச்சல்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை முழுவதும் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1,403 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 484 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. பரிசோதனை செய்ததில் 49 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டன என்றார்.
ஒருவர் மரணம்
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 96 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலின் தீவிரத்தால் 15 வயது சிறுவன் மட்டும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பத்து மாதத்தில் பாதிப்பு
சென்னையில் 17 லட்சம் வீடுகள் உள்ளன. 500 வீடுகளுக்கு ஒரு மலேரியா ஊழியர் வீதம் மொத்தம் 3,500 பேர் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவது, மருந்து தெளிப்பது, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
நிலவேம்பு குடிநீர்
சென்னையில் உள்ள 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 252 அம்மா உணவகங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பெசன்ட் நகர் கடற்கரையில் வழங்கப்படுவது போன்று மெரினா கடற்கரையிலும் நிலவேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தயார் நிலையில் மாநகராட்சி
டெங்கு காய்ச்சல் குறித்த தகவல் தராத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தராத சில தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். டெங்கு காய்ச்சலுக்கு தேவையான ரத்த அணுக்கள், ரத்த கூறுகள் உள்ளிட்ட மருந்துகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க குடிசைப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் விக்ரம் கபூர் கூறியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளில் பாதிப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 3,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 2013ம் ஆண்டில் 133 பேரும், 2014ம் ஆண்டில் 137 பேரும், 2015 அக்டோபர் வரை 96 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி மற்றும் மாநில சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாம் செய்யவேண்டியது என்ன?
கொசுக்கடிகளிலிருந்து நம்மைப் பாதுகாப்பதன் மூலம் டெங்குவைத் தடுக்கலாம். நாம் வசிக்கும் இடங்களுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் நன்றாகக் காய்ச்சிய குடிநீரைப் பயன்படுத்துவது மிக மிக அவசியம்.
கைகொடுக்கும் சித்த மருத்துவம்
டெங்கு காய்ச்சலையும் சித்த மருத்துவம் மூலம் எளிதில் குணப்படுத்தலாம். நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு இருக்கும்போது கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். நம்முடைய சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொண்டாலே கொசுக்கள் வர வாய்ப்பு இல்லை என்பதும் சுகாதாரத்துறையினரின் அறிவுரையாகும்.












Click it and Unblock the Notifications