பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்து பரிசு வென்ற மலைவாழ் மாணவி
நாமக்கல்: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல், கட்டுரைப் போட்டியில் கொல்லிமலை மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர். திருப்பூரில் முஸ்லீம் மாணவிகள் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆண்டுதோறும் பாவை விழா கொண்டாடப்படுகிறது. திருக்கோயில்களில் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1 முதல் 5ம் வகுப்பு, 6 முதல் 8ம் வகுப்பு மற்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ மாணவியர் மூன்று பிரிவுகளாக கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற பாவை விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. இந்த போட்டிகள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும், 6ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையும் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மலைவாழ் பள்ளி மாணவி வெற்றி
இதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நடைபெற்ற போட்டியில் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பைல்நாடு மாணவி மா. மகாலட்சுமி முதல்பரிசை வென்றார். இந்த மாணவி 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில் 3 ஆண்டுகளாகவே மாணவிகள் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்து பரிசுகளை வென்று வருகின்றனர். நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலத்தில் பாவை விழா
சேலம் வாசவி மஹால் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாவை விழா மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவியருக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகளை மாநில நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைத்தார்.
மாணவர்களுக்கு பரிசு
சேலம் மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர்.புத்தகங்கள், விளையாட்டுப் பொருள்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூரில் விழா
திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாவை விழா நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மாணவி இரண்டு பரிசுகளை வென்று அசத்தினார். பிச்சம்பாளையம் கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் மாவட்ட அளவில் 31 பள்ளிகளைச் சேர்ந்த 377 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் திரு.எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில், இஸ்லாமிய மாணவி சபானா பாத்திமா 2 பரிசுகளை வென்று அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார்.












Click it and Unblock the Notifications