அப்பா ஒரு ஃபேமிலி போட்டோ கூட எடுக்கல.. பெரியபாண்டியின் மகன் உருக்கம்!
வீரமரணமடைந்த பெரியபாண்டி தங்களுடன் ஒரு குடும்ப போட்டோ கூட எடுக்கவில்லை என அவரது மகன் வேதனை தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: வீரமரணமடைந்த பெரியபாண்டி தங்களுடன் ஒரு குடும்ப போட்டோ கூட எடுக்கவில்லை என அவரது மகன் வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளரான பெரியபாண்டி ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு காவல்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நெல்லையைச் சேர்ந்த பெரியபாண்டி சென்னை ஆவடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

பெரியபாண்டி மகன் தகவல்
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவரது மூத்த மகன் ரூபன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தந்தை தனது போலீஸ் வேலையில் பெரும் ஈடுபாட்டோடு இருந்ததாக கூறினார்.

ஃபேமிலி போட்டோ இல்லை
தங்களுடன் இதுவரை ஒரு குடும்ப போட்டோ கூட அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். வீடு முழுக்க உயர் அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் பரிசு வாங்கும் புகைப்படங்களும் மட்டுமே இருப்பதாக ரூபன் உருக்கமாக கூறினார்.

குறைந்த நேரமே செலவழிப்பு
2 நாட்களுக்கு முன்பு போனில் பேசிய போது கூட வேலையிருப்பதாக கூறி அழைப்பை துண்டித்துவிட்டார் என்றும் அவர் கூறினார். தந்தை பெரியபாண்டி எப்போதும் பணியிலேயே ஆர்வமாக இருப்பார் என்றும் குடும்பத்துடன் மிகக் குறைவாகவே நேரம் செலவழிப்பார் என்றும் அவர் கூறினார்.

சொந்த ஊரில் சோகம்
மேலும் ஏதாவது நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றால் கூட குடும்பத்தினர் முன்னால் சென்ற பிறகு பணியை முடித்துவிட்டு பின்னால் தனியாக தான் வருவார் என்றும் ரூபன் கூறினார். பெரியபாண்டியின் மரணத்தால் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சாலைபுதூர் கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications