கன்னத்தில் அறைந்த ஆசிரியர் - பள்ளியிலேயே தீக்குளித்த பிளஸ் 2 மாணவர்; காரைக்குடியில் சோகம்
காரைக்குடி: காரைக்குடியில் ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததால் பிளஸ் 2 மாணவன் பள்ளியிலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் ஓ.ஏ.தெருவை சேர்ந்த மாயாண்டியின் மகன் பிரகாஷ். அதே தெருவில் உள்ள அருணாசலம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை வேதியியல் ஆசிரியர் செபஸ்டின் செல்வகுமார், கேட்ட கேள்விகளுக்கு பிரகாஷ் மற்றும் 2 மாணவிகளுக்கு பதில் தெரியவில்லை.

இதனால் பதிலை 50 முறை மீண்டும், மீண்டும் எழுதி வருமாறு கூறினார். பிரகாஷும், மற்றொரு மாணவியும் அதை எழுதாமல் பள்ளிக்கு வந்தனர். இதையடுத்து பிரகாஷை, மாணவிகள் முன்பு ஆசிரியர் கன்னத்தில் அறைந்துள்ளார். அவரையும், 1 மதிப்பெண் வினா கேட்டு சரியாக சொல்லாத 8 பேரையும் வகுப்பறையிலிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காலை 11 மணியளவில் பள்ளி இடைவேளையின்போது வேதியியல் ஆய்வகத்தில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அங்கு ஓடி சென்றனர். கதவு உள்புறமாக பூட்டியிருந்தது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உடல் முழுவதும் எரிந்து கருகிய நிலையில் மாணவர் பிரகாஷ் இறந்து கிடந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்த தகவல் அறிந்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் பள்ளி முன் திரண்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பிரகாஷின் உறவினர்கள் கூறுகையில், "ஆசிரியர் அடித்ததில் பிரகாஷ் இறந்து விட்டார். அதை மறைப்பதற்காக, உடலை எரித்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். ஆய்வகத்தில் அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்திருந்தால் அங்கும், இங்கும் ஓடியிருப்பார். ஆனால் அப்படி எந்த அடையாளமும் இல்லை. அவரது சாவில் மர்மம் உள்ளது''என்றனர்.
உடலை ஆய்வகத்தில் இருந்து எடுக்கவிடாமல் தடுத்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியர் செபஸ்டின் செல்வகுமாரை விசாரணைக்காக பள்ளத்தூர் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். ஆசிரியர் அடித்ததால் பள்ளியிலேயே மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications