அன்புமணி கைது! வன்முறை, துப்பாக்கிச் சூடு, பஸ் நிறுத்தம்! பரபரப்பான நெய்வேலி! பாமகவினர் 28 பேர் கைது
நெய்வேலி: நெய்வேலியில் உள்ள என்எல்சி முற்றுகை போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் வன்முறை நடத்தியநிலையில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் நேற்றைய தினம் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது.
அப்போது என்எல்சி நுழைவுவாயில் முன்பு தனது தொண்டர்களுடன் நுழைய முற்பட்ட அன்புமணி ராமதாஸை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவுக்கு இடையே அன்புமணி ராமதாஸை கைது செய்ய காவல் துறை வாகனம் வரவழைக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள் காவல் துறை வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீஸார் அவர்களை விரட்டினர். பின்னர் அன்புமணி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். எனினும் அவரை கைது செய்யக் கூடாது என வாகனம் முன்பு அமர்ந்து போலீஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸார், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து கூட்டத்தை கலைப்பதற்காக போலீஸார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். ஆனால் கல்வீச்சுத் தாக்குதல் தீவிரமடைந்ததை அடுத்து போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து அங்கிருந்த கூட்டத்தினர் கலைந்து சென்றனர். கற்கள், கண்ணாடி துண்டுகள், என சாலையில் இருந்ததால் அந்த இடமே போர்க்களம் போல் இருந்தது. இத்தனை எதிர்ப்புகளை மீறி போலீஸார் அன்புமணியை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தார். அவரை விடுவிக்கக் கோரியும் ஆங்காங்கே சாலை மறியல்கள் நடந்தன.
இதைத் தொடர்ந்து சென்னை கும்பகோணம் சாலையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாமகவினர் போராட்டம் செய்தனர். இந்த நிலையில் கடலூரிலிருந்து நெய்வேலி மார்க்கமாக திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் நேற்று நிறுத்தப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடு திரும்பியதை உறுதி செய்தபிறகு கடலூர் மாவட்டத்தில் முழுமையாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் போராட்டம், வன்முறை, கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக பாமகவை சேர்ந்த 28 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications
