ஜெ.வுக்கு திதி கொடுக்க அனுமதி மறுப்பு... போயஸ் கார்டனில் தினகரன் ஆதரவாளர்கள் குவிந்ததால் பரபரப்பு!
ஜெயலலிதாவிற்கு திதி கொடுக்க புரோகிதர்களை அனுமதிக்காததால் தினகரன் ஆதரவாளர்கள் போயஸ் கார்டனில் திரண்டனர்.
சென்னை: போயஸ் கார்டன் இல்லத்திற்குள் ஜெயலலிதாவிற்கு திதி கொடுக்க வந்த புரோகிதர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்காததால் தினகரன் ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறந்த நாளின் நட்சத்திர திதி தேதி இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக போயஸ் கார்டனில் பூஜை செய்வதற்காக இன்று காலையில் புரோகிதர்கள் போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அரசு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் அறிந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், வி.பி.கலைராஜன் மற்றும் செந்தமிழன் உள்ளிட்டோருடன் 150க்கும் மேற்பட்ட அதிமுக அம்மா அணியினர் போயஸ் கார்டனில் குவிந்தனர். புரோகிதர்களை மட்டும் பூஜை செய்ய அனுமதிக்குமாறு அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எனினும் போலீசார் திட்டவட்டமாக அனுமதி மறுத்ததால் தினகரன் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் பேரிகார்டு போட்டு போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்திவிட்டதால் சிறிது நேரம் அங்கேயே நின்றவர்கள் பின்னர் அதிருப்தியுடன் கலைந்து சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications