சென்னை பள்ளி நிர்வாகியிடம் 100 பவுன் நகை கொள்ளை - போலீஸ் விசாரணை!
சென்னை: சென்னையில் தனியார் பள்ளி நிர்வாகி ஒருவரின் காரில் இருந்து சுமார் 100 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகேசன் என்ற தனியார் பள்ளி நிர்வாகி.
இவர் இன்று நடைபெறும் தனது சகோதரியின் மகள் திருமண நிச்சயத்திற்காக நேற்று மதியம் கே.கே.நகர் பகுதியில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் இருந்து 100 பவுன் நகையை எடுத்து வந்துள்ளார்.
காரில் பயணம்:
எடுத்த நகைகளை ஒரு பையில் போட்டு காரின் நடு இருக்கையில் வைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்.
டயர் பஞ்சர்:
காளியம்மன் கோவில் அருகில் அவரது கார் சென்றபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரின் பின்பக்க டயர் பஞ்சர் என்று முருகேசனிடம் கூறியுள்ளனர்.
கீழே இறங்கிய முருகேசன்:
இதைக் கேட்டதும் காரை ஓரமாக நிறுத்திய முருகேசன் கீழே இறங்கி பார்ப்பதற்காக காரின் கதவை திறந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு ஆசாமி கோயம்பேட்டிற்கு எப்படி செல்ல வேண்டும் என்று அவரிடம் முகவரி கேட்டார்.
வழி கேட்ட ஆசாமி:
அவருக்கு முருகேசன் வழி சொல்லி விட்டு காரின் கதவை மூடி விட்டு காரின் எந்த டயர் பஞ்சர் ஆகி உள்ளது என்று பார்த்தார்.
100 பவுன் மாயம்:
ஆனால் கார் டயர்கள் பஞ்சர் ஆகாததால் சிறிது நேரத்தில் காரின் முன்பக்க கதவை திறந்து கொண்டு காரை எடுத்து செல்ல முயன்றார். அப்போது காரின் நடு சீட்டில் 100 பவுன் நகைகள் வைத்திருந்த பை மாயமாகி இருப்பதை கண்டு முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி முருகேசன் விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை:
இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்கள் மற்றும் நகை கொள்ளை போன பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் உருவங்கள் பதிவாகி உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications