எடப்பாடி பெயரை சொல்லாமல் தவிர்த்த செங்கோட்டையன்.. ஆனால் இப்படி பேசிட்டாரே! பனிப்போர் ஓய்ந்ததா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் அதிமுக சார்பில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். "எடப்பாடி ஆட்சி அமைக்கவே" என்று அதிமுகவினர் முழக்கமிட்டபோது செங்கோட்டையன் முழக்கமிடாமல் மவுனம் காத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.பி சத்யபாமா, பவானி எம்.எல்.ஏ பன்னாரி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Sengottaiyan Avoids Naming Edappadi Palaniswami During AIADMK Protest in Erode

எடப்பாடி பெயரை குறிப்பிடாத செங்கோட்டையன்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் தவிர்த்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ஆர்ப்பாட்டத்தின்போது "எடப்பாடி ஆட்சி அமைக்கவே" என்று அதிமுகவினர் முழக்கமிட்டபோது செங்கோட்டையன் முழக்கமிடாமல் மவுனம் காத்தார்.

அதேபோல ஆர்ப்பாட்டத்தில் பேசும்போதும் சரி, அதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடாமல், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது அதிமுக பொதுச் செயலாளர் என்றே குறிப்பிட்டுப் பேசினார் செங்கோட்டையன்.

செங்கோட்டையன் பேச்சு

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தார்கள். அந்த வழியில் எதிர்க்கட்சித் தலைவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார். அந்த நல்லாட்சி மீண்டும் வர வேண்டும். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் கற்றுக்கொண்டு உள்ள பாடத்தை பின்பற்றி வருகிறார்கள்.

ஒரு அமைச்சர் எப்படி பேசவேண்டுமோ அதை விடுத்து பெண்களை இழிவு படுத்தும் விதமாக அமைச்சர் பொன்முடி பேசுகிறார். இந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என அமைச்சராக பதவியேற்கும் போது உறுதிமொழி ஏற்ற பொன்முடி, இப்படி பேசியிருப்பது கண்டனத்துக்கு உரியது. அமைச்சர் பொன்முடி மக்களைப் பற்றி கவலைப்படாமல் பேசி வருகிறார்." என்று பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "ஒரு அமைச்சர் இப்படி பேசிய பிறகு, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதுபோன்ற செயல்களை கண்டிக்கவே இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட முடிவுகளை அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமானவர் எடுப்பார்" எனத் தெரிவித்தார்.

பனிப்போர்

முன்னதாக அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ளாதது; ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஆகிய நிகழ்வுகளால் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே பனிப்போர் நிலவுவது வெளிப்படையாகவே தெரிந்தது.

அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் உடனான காணொளி காட்சி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி பேசாமல் மௌனம் காத்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் கழகப் பொதுச் செயலாளர் என்றே இன்று செங்கோட்டையன் பேசியிருக்கிறார். அதேநேரம், எடப்பாடி பழனிசாமி புகழ்ந்தும் பேசி உள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+