பாளை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்க கடைகள் திறப்பு
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சிறப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கான கடைகளை சிறை எஸ்.பி. கனகராஜ் திறந்து வைத்தார்.
தமிழக மத்திய சிறையில் உள்ள கைதிகள் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி கைவினை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள கைதிகள் லட்டு, அல்வா, மிக்சர், சிப்ஸ், காராசேவ் மற்றும் மெழுகுவர்த்தி, ரெடிமேட் ஆடைகள், பாக்குமட்டை தட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயார் செய்து வருகின்றனர். இவற்றை விற்பனை செய்வதற்காக சிறை வளாகத்தில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த கடைகளை சிறை சூப்பிரண்டு கனகராஜ் திறந்து வைத்து பேசுகையில்,
தமிழ்நாட்டில் உள்ள சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடையை முதல்வர் சென்னையில் திறந்து வைத்தார். இந்த திட்டம் மாநிலத்தில் உள்ள மற்ற சிறைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1700 கைதிகள் உள்ளனர். இதில் 600 பேர் தண்டனை கைதிகள், இவர்களில் 300 பேர் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். நாப்கின் தயாரிப்பு மற்றும் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் விளையும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.
இங்கு தயாரிக்கப்படும் அல்வா திருச்சி, சென்னை மத்திய சிறைக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சிறை அங்காடி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும். குறைந்த லாபத்தில் இங்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும். இதற்காக ரூ.50 ஆயிரம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கிடைக்கும வருமானத்தில் 20 சதவீதம் கைதிகளுக்கும், 40 சதவீதம் முதலீடாகவும், 20 சதவீதம் கைதிகளின் குடும்பத்தினருக்கும், மீதமுள்ள 20 சதவீதம் நல நிதியில் சேர்க்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications