For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நட்டாற்றில் விட்டவர், காட்டிக் கொடுத்தவர்.. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தை வறுத்த மா.சுப்பிரமணியன்

அதிமுக எம்.பி. பாலசுப்பிரமணியத்தை திமுக தென் சென்னை மாவட்ட செயலர் மா.சுப்பிரமணியன் கண்டித்துள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா-பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சந்திப்பை விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு, திமுக சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா. சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: சசிகலாவை அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் என்று பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததை கண்டித்து, ஸ்டாலின் ஆளுநருக்கு புகார் அளித்தார்.

South Chennai DMK secretary Ma.Subramaniyan condemns S.R.Balasubramaniyan

அந்த புகாரில் உயர்கல்வியின் ஒளி விளக்காக இருக்க வேண்டியவர்கள், இப்படி அரசியல்ரீதியாக செயல்பட்டது தவறு என்றும், அதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

துணை வேந்தர் பேட்டி

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் 'தி இந்து' ஆங்கில பத்திரிகையில் கொடுத்துள்ள பேட்டியை சுட்டிக்காட்டி, துணை வேந்தர்களின் செயல் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றே ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அரைவேக்காட்டு

ஆனால், ஸ்டாலின் கடித்ததை முழுமையாக படிக்காமல், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அரை வேக்காட்டுத்தனமாக விடுத்திருக்கும் அறிக்கையில், என்ன சொல்கிறோம் என்பதே தெரியாத அளவிற்கு உளறிக் கொட்டியிருக்கிறார்.

கட்சியை காட்டிக்கொடுத்தார்

பாவம், மறைந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆகியோரிடமெல்லாம் அரசியல் செய்து, மறைந்த மூப்பனார் அவர்களின் உதவியில் வளர்ந்து, பிறகு அவரது பிள்ளையை நட்டாற்றில் விட்டு விட்டு, தேர்தல் ஆதாயத்திற்காகவும், பதவி சுகத்திற்காகவும், தனக்கு அங்கீகாரம் அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, மறைந்த ஜெயலலிதாவிடம் காட்டிக் கொடுத்தவர் அவர். அதனால் தான் நாகரிகமாக அரசியல் செய்து வரும் ஸ்டாலினை பார்த்தால், அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

சசிகலாவுக்கு விசுவாசம்

'காலி பெருங்காய டப்பா' என்ற பட்டத்தைக் கொடுத்த அதிமுகவிற்கே சென்று, இன்று சசிகலாவிற்கும் விசுவாசமாக அவர் இருப்பது என்பது அவரது சொந்தப் பிரச்சினை. அதற்காக எங்கள் ஸ்டாலினை வம்புக்கு இழுக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன். அதிமுகவின் உட்கட்சி விஷயங்களில் திமுக தலையிடுகிறது என்று சொல்லும் அவரிடம் நான் கேட்க விரும்புவது, அதிமுகவிற்குள் அரசியல் செய்து கொண்டிருப்பது அந்த கட்சியின் அமைச்சர்களா அல்லது திமுகவா?

அரசியல் செய்வது யார்?

சசிகலாவிற்காக ஓ,பி.எஸ். முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார் என்று சொன்னது யார்? அதிமுக அமைச்சர்கள் தானே? சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர், 20 நாட்கள் பதவியில் இருப்பதற்குள், அவரை பதவி விலக வலியுறுத்தி, மறைந்த அம்மையார் ஜெயலலிதா சமாதியில் நின்று தீர்மானம் நிறைவேற்றி, சசிகலாவிடம் கொடுத்து, அநாகரீகமான அரசியல் செய்தது அதிமுக அமைச்சர்கள் தானே? தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடந்தும், அதுபற்றி இன்றுவரை வாய் திறக்காமல் இருப்பது யார்? அதிமுகவில் பதவி சுகத்தை மட்டுமே அனுபவிக்க உட்கட்சியிலேயே அரசியல் செய்யும் அமைச்சர்கள் தானே?

அரசியல் நாகரீகம்

ஸ்டாலின், அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர். மறைந்த அம்மையார் ஜெயலலிதாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அஞ்சலி செலுத்தியவர், இன்று 'தி இந்து' ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூட, "அதிமுகவின் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை", என்று பெருந்தன்மையுடன் பதில் சொல்லி இருக்கிறார்.

ஓ.பி.எஸ்சுக்கு எதிராக பொங்குகிறார்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக அமைச்சர்கள் கொடுக்கும் நெருக்கடி பற்றி இன்றைய பேட்டியில் ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொங்கியிருக்கிறார் என்றுதான் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் அறிக்கையை படித்ததும் நினைக்கத் தோன்றுகிறது. அதிமுகவிற்குள் உள்ளபடியே அரசியல் செய்யும் சக்திகளை தட்டிக்கேட்க திராணியில்லாத எஸ்.ஆர்.பி., ஸ்டாலின் மீது பாய்வது, அவரது வயதிற்கும், அரசியல் அனுபவத்திற்கும் ஏற்றதல்ல. அரசியல் இலக்கணத்தை எங்கோ மொத்தமாக குத்தகைக்கு விட்டு விட்டு ஸ்டாலின் மீது அவர் விழுந்து புறாண்டுவது போல உள்ளது.

நிதானம்

இன்றைக்கு 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக மக்கள் பணியாற்றி வரும் ஸ்டாலின், அதிமுகவிற்கு நேர்ந்துள்ள இந்த நெருக்கடியான் நேரத்திலும், நிதானம் காக்கிறார். அவரை வீணாக சீண்ட வேண்டாம் என்று எஸ்.ஆர்.பி. அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

சொந்த வீட்டில் சண்டை

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு, இப்படி கண்மூடித்தனமாக கல்லெறிவது, அதிமுகவிற்கு எந்தவகையிலும் உதவாது என்று சுட்டிக்காட்டும் அதேவேளையில், சொந்த வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு, அடுத்த வீட்டுக்காரரிடம் அசிங்கமான அரசியல் நடத்த எஸ்.ஆர்.பி. போன்றவர்கள் துணை போக வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
South Chennai DMK secretary Ma.Subramaniyan condemns S.R.Balasubramaniyan for his statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X