திணிக்கப்படும் இந்தி பெண்ணே கேள்..! நீ தேடிவந்த கோழைநாடு இதுவல்ல..
சென்னை:1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை கண்டது தமிழகம். இப்போது, இந்தி பாடத்தை கற்க மக்கள் ஆர்வமுடன் உள்ளதாக சில ஊடகங்களில் திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதால் தமிழ் ஆர்வலர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
(சமூகவலைதளங்களில் இந்தி மொழியை பயன்படுத்த உத்தரவு- மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!)

ராஜாஜி போட்ட முதல் புள்ளி
1938களில் இந்திக்கு எதிராக தமிழகம் பெரும் போராட்டத்தை கண்டது. ராஜாஜி, 1937ல் பள்ளிகளில் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார். அதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. எதிர்ப்பின் தீவிரத்தை உணராத ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் முதல் கட்டமாக 1ம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை கட்டாயமாக இந்தியை கற்பிக்க வேண்டும் என்று அவ்வாண்டு ஏப்ரல் 21ம்தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து போராடுவதென்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

பெண்கள் போராட்டம்
1938ம் ஆண்டு ஜுன் 3ம் தேதி சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. ராஜாஜி வீட்டு முன்பாக மறியல் செய்து, பலர் கைதானார்கள். இந்தி எதிர்ப்பின் அவசியத்தை மக்களிடம் பரப்ப "தமிழர் பெரும்படை" என்ற பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. கட்டாய இந்தியை எதிர்த்து 1938ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி டாக்டர் தர்மாம்பாள் தலைமையில் பெண்கள் மறியல் செய்தனர். அதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

பெரியார் கைது
போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி, ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் பெரியாருக்கு 2 குற்றச்சாட்டுகளுக்காக தலா ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை ஒன்றின்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்தால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பெரியார் அபராதம் கட்ட மறுத்து, 2 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறை சென்றார்.

அண்ணா கைது
அவரை பெல்லாரி சிறையில் அடைத்தனர். அபராதத் தொகைக்காக அவருடைய கார் பறிமுதல் செய்யப்பட்டது. 1938 செப்டம்பர் 26ம் தேதி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணா கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றும் ஈழத்து சிவானந்த அடிகளாருக்கு 9 மாதம், கே.எம்.பாலசுப்பிரமணியத்துக்கு 6 மாதம், மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசுக்கு 6 மாதம், குடந்தை எஸ்.கே.சாமிக்கு 18 மாதம், வண்ணை சாது நாராயண மடாலய பீடாதிபதி அருணகிரி அடிகளாருக்கு 2 வருடம், பாவலர் பாலசுந்தரத்துக்கு 3 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராஜாஜி அதிர்ச்சி
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகிச் சிறை சென்ற தாளமுத்து, நடராசன் இருவரும் சிறையிலேயே மரணம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்திக்கு இவ்வளவு கடும் எதிர்ப்பு இருக்கும் என்று ஆரம்பத்தில் ராஜாஜி நினைக்கவில்லை. போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து பெரியாரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். 167 நாள் சிறையிலிருந்த பெரியார், விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான 6 மாதங்களுக்குப்பின், போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், கட்டாய இந்தி உத்தரவை வாபஸ் பெறும் வரை போராட்டம் ஓயாது என்று பெரியாரும், மற்ற தலைவர்களும் அறிவித்தனர்.

இந்தி திணிப்பு வாபஸ்
இந்த நேரத்தில், பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைப்பதில்லை என்ற தீர்மானத்தைக் காங்கிரஸ் மேலிடம் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து, மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் அமைச்சரவைக்கள் பதவியை விட்டு விலகின. ராஜாஜி அமைச்சரவையும் 1939, அக்டோபர் 28ம்தேதி ராஜினாமா செய்தது. இதையடுத்து 1940 பிப்ரவரி 21ம்தேதி கட்டாய இந்தி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. குறிப்பிட்ட காலம் இந்தி ஒதுங்கியிருந்த நிலையில், மீண்டும் 1965ல் பிரச்சினை வெடித்தது.

மத்திய அரசு இந்தி திணிப்பு
இந்தியை அரசு மொழியாக்கும் அப்போதைய மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து1965ம் ஆண்டு தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது. இந்தி தெரியாத தமிழகத்தை சேர்ந்தவர்கள் மத்திய அரசு பணிகளில் சேருவது இயலாத காரியமாகிவிடும் என்பதும் எதிர்ப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

பிரதமர் உறுதிமொழி
போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் பெரும் கலவரமாக பரவிய இந்தி எதிர்ப்பு போராட்டம் காவலர்களால் அடக்க முடியாத அளவில் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து மாணவர் போராட்டம் ஓய்ந்தது.

இந்தியால் இழந்த ஆட்சி
இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாநில அரசுகளின் அரசியல் மாற்றங்களுக்கும் வித்திட்டது. 1967ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி கண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு, இந்தியை திணிக்க நினைத்த காங்கிரசால் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை. மாணவர் போராட்டத்தின் சக்தியை அப்போதுதான் தமிழகம் முதன்முறையாக கண்டது.

வயிற்றில் பால் வார்ப்பு
இந்திக்கு எதிராக பெரும் போரையே சந்தித்தது தமிழகம் என்றால் அதுமிகையில்லை. இந்நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு வரை தமிழில் மட்டுமே பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்று 2006ம் ஆண்டு, அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது. இதனால் தமிழகத்து பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் தமிழை கட்டாயமாக கற்க வேண்டியது அவசியமாகிறது. இளையதலைமுறை தமிழை மறந்துவிடுமோ என்று அச்சத்தில் இருந்த ஆர்வலர்களுக்கு இந்த உத்தரவு வயிற்றில் பாலை வார்த்தது.

கிளம்பிய ஊடகங்கள்
இந்நிலையில் இந்திக்கு ஆதரவாக ஒரு பிரிவு ஊடகங்கள் இப்போது இந்தியை தூக்கி பிடித்து கிம்பியுள்ளன. சென்னையில் கல்வி பயிலும் கர்நாடகா, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கு தமிழ் வேண்டாம், இந்தி வேண்டும் என்று கூறுவதாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது என்.டி.டி.வி. மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி முதல்வர் ரேவதி பூன்ஸ் கூட, இந்தியை பாடத்திட்டத்தில் சேர்க்க ஆதரவு தெரிவிப்பதாக அது செய்தி வெளியிட்டுள்ளது.

புளுகு மூட்டைகள் அவிழ்ப்பு
இதேபோன்ற செய்தியை, கேரளாவின் ஏசியாநெட் குரூப் கர்நாடகாவில் நடத்தும் சுவர்ணா நியூஸ் தொலைக்காட்சியின் வெப்சைட் செய்தியிலும் பிரசுரித்துள்ளது. இதையே 'நிதி சென்ட்ரல்' என்ற ஆங்கில வெப்சைட்டும் 'தமிழகத்தில் இந்தி மீண்டும் வருகிறது' என்று தலைப்பிட்டு இந்தியின் அத்தியாவசியத்தை புகழ்ந்துள்ளது. (Hindi makes a comeback in Tamil Nadu)

தமிழ் படித்தால் உருப்படமாட்டோமா..?
இந்திக்கு ஆதரவாகவும், தமிழை படித்தால் உருப்படாமல்தான் போவோம் என்பது போலவும் இந்த ஊடகங்கள் வரிந்து கட்டி எழுதி வருகின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே மத்திய அரசின் பாட திட்டத்தில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, கேலி செய்து கார்டூன் வெளியிடப்பட்டது. பெரும் எதிர்ப்புக்கு பிறகு அந்த கார்ட்டூன் நீக்கப்பட்டது.

இரு கட்சிகளும் ஓரணியில்
இப்போது மீண்டும் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுகிறது ஊடகங்கள். இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டும் திமுக, தற்போது உட்கட்சி பிரச்சினைகளால் தடுமாறுவதை கவனித்து, இப்போது அடித்தால் எப்போதும் தமிழன் எழும்ப முடியாது என்று நினைத்துவிட்டனபோலும், இந்தி ரத்தங்கள். ஆனால் புண்ணியத்துக்கு, இந்த விவகாரத்தில் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளன. தமிழை கட்டாய பாடமாக தொடருவதையே அதிமுகவும், திமுகவும் விரும்புகின்றன. திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் இதுபற்றி கூறுகையில், "தமிழ் வழி கல்வியில் படித்து சாதித்தவர்கள் ஏராளம். தமிழில் படித்தவர்தான் அப்துல்கலாம்" என்றார். அதிமுக வட்டாரமும், 10ம் வகுப்புவரை மாணவர்கள் தமிழில் படிப்பதையே விரும்புவதாக தெரிவித்தன.

இந்தி படிப்பது கூலி வேலைக்காகவா?
பல மொழிகளைப் படிப்பதில் தப்பே இல்லை தான். ஆனால், இந்தி படிக்காவிட்டால் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என்பது போன்ற வாதங்களை வடக்கு முன்வைப்பதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் இதில் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் இந்தி கல்விக்கும், திணிப்புக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவிகளாகி விடுவோம்.
இந்தி படிக்காவிட்டால் வட இந்தியாவில் வேலை பார்க்க முடியாது என்பது முழு பொய். உலகமயமாக்கல் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் ஆங்கிலம் உலகை ஆள்கிறது. இந்தியா முழுவதிலும் ஆங்கிலமே இணைப்பு மொழியாக விளங்குவதால் அதுகுறித்த அச்சம் தேவையில்லை. வட இந்தியாவில் வேலை வாய்ப்புகளே இல்லாமல் தான் அங்கிருந்து சாப்ட்வேர், மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் படித்தவர்களும், தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் கூலி வேலைக்காகவும் பெங்களூருக்கும், சென்னைக்கும் படையெடுத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், நாம் இந்தியை கற்று என்ன செய்யப் போகிறோம்.
அதற்கு உலக மொழியான ஆங்கிலத்தைப் படிக்கலாமே!

தாயைப் போன்றது தாய்மொழி
அப்துல்கலாமும், மயில்சாமி அண்ணாதுரையும் தமிழில் படித்துதான் மாபெரும் விஞ்ஞானிகளாகினர். இன்னும் சரியாக சொன்னால், தமிழிலில் படித்ததால்தான் அவர்கள் இந்த நிலைக்கு வரமுடிந்தது. எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால் இந்த மொழிதான் உயர்ந்தது என்று எந்த மொழியையும் யார் மீதும் திணிப்பதை ஏற்கவே முடியாது.












Click it and Unblock the Notifications