எப்புடி சார்? வாயால் ஸ்டாலின், அன்பில் மகேஸ் உருவ படம்.. அசால்டாக வரைந்து கோரிக்கை வைத்த ஆசிரியர்
கள்ளக்குறிச்சி: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது படங்களை வாயால் வரைந்து கோரிக்கை வைத்து இருக்கிறார் ஓவிய ஆசிரியர்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நூதன முறையில் இந்த கோரிக்கையை வைத்து இருக்கிறார் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் செல்வம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணலூர்பேட்டையை சேர்ந்த சு.செல்வம். இவர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது கவனத்தை ஈர்க்கும் புதிய யுக்தியை கையில் எடுத்தார்.

அதற்காக கைகளை பயன்படுத்தாமல், "வாயால்" ஒரே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது படத்தை வரைந்தார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகியப் பாடப்பிரிவுகளை சொல்லித்தரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12,000 பேர் இருக்கிறார்கள்.

13 ஆவது ஆண்டாக பணி நிரந்தரம் ஆகாமல் குறைவான மாத சம்பளம், உணவு, மருத்துவ செலவு, வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுக்கு கடன் வாங்கி கஷ்டப்படுகின்றனர். விலைவாசி உயர்வால் குடும்ப பொருளாதாரத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை உள்ளிட்ட காரணங்களால் தவிக்கும் பகுதி நேர ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் 181 வது உறுதி மொழியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணி நிரந்தரம் வழங்க வேண்டி பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது கவனத்தை ஈர்க்க இந்த முயற்சியை கையில் எடுத்து உள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள 181 வது உறுதிமொழியான பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை நிறைவேற்றி வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டி 'ப்ளீஸ் எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும்' என்ற வாசகத்துடன் வாயால் ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி படத்தை 15 நிமிடங்களில் வரைந்து நூதன முறையில் கோரிக்கை வைத்தார்.












Click it and Unblock the Notifications