ஆர்.கே. நகரில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்யப்பட்டது யார் பணம்? - ஓபிஎஸ் அணி கேள்வி
ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட ரூ. 89 கோடி யாருடைய பணம் என்று ஓபிஎஸ் அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு அமைச்சர்கள் மூலம் பட்டுவாடா செய்யப்பட்ட ரூ. 89 கோடி பணம் யாருடையது என்று ஓபிஎஸ் அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை ஒட்டி, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும், பரிசுப்பொருட்கள், மளிகை சாமான்கள், மட்டன் சிக்கன் என நூதனமுறையில் வாக்காளர்களுக்கு அளிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையத்திற்குப் புகார் சென்றது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வு மேற்கொண்டு சிலரை கைது செய்தனர்.
இதற்கிடையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் வீடு, அலுவலகம், நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

பணப்பட்டுவாடா புகார்
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? யாருடைய தலைமையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்பது பற்றி பட்டியல் கிடைத்தது. இது வாட்ஸ் அப்பில் வெளியானது. இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

ஓபிஎஸ் அணி புகார்
இதனிடையே ஆர்.கே. நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.பி. முனுசாமி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது பற்றி டிடிவி தினகரன் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாக கூறினார்.

பணம் யாருடையது?
ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்படும் பணம் யாருடையது என்றும் முனுசாமி கேள்வி எழுப்பினார். அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ரூ. 5 லட்சம் வாங்கியது உண்மை என்று மருத்துவர் பாலாஜி கூறியுள்ளார். இது உண்மை எனில், அந்த பட்டியலில் உள்ள அனைத்துமே உண்மைதானே என்று கேட்டார் முனுசாமி.

கண்டனம்
ஒபிஎஸ் அணியினர் பணப்பட்டுவாடா செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு பொய்யானது இதனை கண்டிக்கின்றோம் என்றும் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications