தென்காசியில் விஏஓ வைதேகி நினைவிருக்கா? வசந்தா கழுத்தில் மின்னிய 11 சவரன் தங்க செயின்.. இப்ப பாருங்க
தென்காசி: நாளுக்கு நாள் தங்கம் விலை எகிறி வரும்நிலையில், நகைக்காக கொலைகளும் அரங்கேறி வருவது அதிகரித்து வருகிறது.. தங்க நகைக்காக சித்தி மகளை கொலை செய்த இளைஞருக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் சமீபத்தில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.. இந்நிலையில், தென்காசியிலும் நகைக்காக, தன்னிடம் பழகிய பெண்ணை ஈவிரக்கமின்றி கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் கடுந்தண்டனையை தற்போது வழங்கியிருக்கிறது.. என்ன நடந்தது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்?
நகைக்காக தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணை காரில் வைத்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 15.2.2013 அன்று, தென்காசி மாவட்டத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. .. அன்றைய தினம், நெற்கட்டும்செவல் ஊரிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையோரம் சாக்கு மூடையில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது.
விஏஓ வைதேகி
ரத்தக்கரையுடன் கிடந்த சாக்குமூட்டையிலிருந்து துர்நாற்றம் அடித்ததால், அந்தப்பகுதி பொதுமக்கள், இதுகுறித்து நெற்கட்டும்செவல் விஏஓ வைதேகிக்கு தகவல் தந்தனர்.
வைதேகியும் இதுகுறித்து புளியங்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தந்தார்.. இதையடுத்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர்.. அதில், இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது.. இதையடுத்து உயிரிழந்த பெண் யார் என்பது குறித்த விசாரணையும் ஆரம்பமானது.
அப்போதுதான் அந்தப் பெண் சங்கரன்கோவில் குருக்கள்பட்டி அருகேயுள்ள சூரங்குடி வடக்கு தெருவை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது மனைவி வன்னித்தாய் என்ற வசந்தா (24) என்பது தெரியவந்தது.
ஆம்னி வேனில் வசந்தா
அதாவது, வசந்தாவுக்கும் வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியை சேர்ந்த மணிகண்டராஜா (42) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. மணிகண்டராஜா சொந்தமாக ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார்.. இந்த ஆம்னி வேனில் ஏறிச்சென்று வந்தபோதுதான், வசந்தாவுக்கும் மணிகண்ட ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மணிகண்ட ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. எனினும் வசந்தாவுடன் அடிக்கடி போனில் பேசிவந்துள்ளார்.
இதனிடையே, மணிகண்ட ராஜாவிற்கு கடன் பிரச்சனை அதிகமாகிவிட்டது.. கழுத்தை நெரிக்கும் கடனில் சிக்கிவிட்டபோதுதான், வசந்தாவின் கழுத்தில் கிடந்த 11 சவரன் தங்கச்சங்கிலி மணிகண்டராஜாவின் கவனத்துக்கு வந்துள்ளது..
காரிலேயே கத்தி குத்து
எனவே, 14.2.2013 அன்று வசந்தாவை தன்னுடைய ஆம்னி வேனில் அழைத்து சென்று, காரிலேயே வசந்தாவை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டார்.. பிறகு வசந்தாவின் சடலத்தை சாக்கில் வைத்து கட்டி சாலையோரம் வீசிவிட்டு நகையை மட்டும் எடுத்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்ட ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடிய நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேலு, குற்றவாளி மணிகண்ட ராஜாவிற்கு ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
27 இடங்களில் கத்திக்குத்து
சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையிலும் இப்படியொரு வழக்கில் தீர்ப்பு தரப்பட்டது.. பழனியப்பன் சிவகாமி தம்பதியின் 20 வயது மகள் லோகபிரியா திருமணமானவர். சிவகாமியின் சகோதரி மகனான சுரேஷ் என்ற 32 வயது நபர், கடந்த 2021 ஏப்ரல் 27-ம் தேதி லோகபிரியாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.
ஆனால், அவர் பணம் இல்லை என்றதால், அடகு வைப்பதற்காக தங்கச் சங்கிலியைக் கேட்டுள்ளார். அப்போதும் லோகபிரியா நகையை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ், லோகபிரியாவை 27 இடங்களில் கத்தியால் குத்தியும், கம்பியால் தாக்கியும் கொன்றுவிட்டு, லோகப்பிரியாவின் ஒன்னேகால் பவுன் நகையை எடுத்து சென்றுவிட்டார்.
தூக்கு தண்டனை தந்த நீதிபதி
இதுதொடர்பான விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பு தரப்பட்டது.
அப்போது நீதிபதி, "27 இடங்களில் கத்தியால் குத்தியதாலும், இரும்பு ராடால் அடித்ததாலும், இதை சாதாரண கொலையாக கருத முடியாது. சுரேஷுக்கு கொலை செய்த குற்றத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும். பெண்ணை அடைத்து வைத்த குற்றத்துக்கு ஓராண்டும், நகை திருடிய குற்றத்துக்கு 10 ஆண்டுகளும் தண்டனை விதித்ததுடன், இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்திருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications