கோவையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் 24 பவுன் நகை மற்றும் ரூ.35,000 பணம் கொள்ளை
போத்தனூர்: கோவையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை அருகே உள்ள போத்தனூர் லாயிட்ஸ்காலனியை சேர்ந்தவர் நிஜாமுதீன். இவர் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையராகவும், தூத்துக்குடியில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியில் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பொள்ளாச்சியில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், நிஜாமுதீன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு அவர் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த 2 பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 24 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த வெளிநாட்டு கைக் கடிகாரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, நிஜாமுதீன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரம்யா பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் மோப்பநாய் வரவழைத்து சோதனையிடப்பட்டது.மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications