புதுக்கோட்டையிலிருந்து அடியாட்களை அழைத்துக் கொண்டு போயிராவிட்டால்... "ஷாக்" தரும் திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை: கடந்த காலத்தில் நான் மட்டும் இல்லாவிட்டால் ஜெயலலிதா பார்சல் செய்து ஹைதராபாத்துக்கே அனுப்பியிருப்பார்கள் என்று கூறியுள்ளார் ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் தளபதியாக செயல்பட்டவரான முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர்.
எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவர் திருநாவுக்கரசர். பின்னர் அதிமுக உடைந்தபோது ஜெயலலிதா பக்கம் திரும்பினார். அவரும், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் இணைந்துதான் ஜெயலலிதாவுக்கு உற்ற துணையாக இருந்தனர். ஜெயலலிதாவுக்காக பல வேலைகளைப் பார்த்தனர்.
பின்னர் தான் விஸ்வரூபம் எடுத்து கட்சியை தன் வசப்படுத்தியதும் இவர்களைக் கழற்றி விட்டு விட்டார் ஜெயலலிதா. தற்போது திருநாவுக்கரசர் காங்கிரஸில் இருக்கிறார். ராமச்சந்திரன் திமுகவில் இருக்கிறார்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டசபை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனியப்பனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் திருநாவுக்கரசர். அப்போது அவர் கூறியதாவது:

யாருமே சந்திக்க முடியவில்லை
கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எப்பவாவது மக்களை சந்தித்துள்ளாரா? 5 ஆண்டுகளில் 5 முறை கூட மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. அவரை சட்டசபை உறுப்பினர்களோ, தமிழக அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ, மத்திய அமைச்சர்களோ யாரும் சந்திக்க முடியவில்லை.

எம்.ஜி.ஆர். இருந்தபோது
கடந்த காலத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவர் பல முறை தமிழகத்தின் வளர்ச்சிக்காக பிரதமரையும் நிதி அமைச்சரையும் சந்தித்துள்ளார். ஆனால் ஜெயலலிதா இது வரைக்கும் ஒரு முறை கூட பிரதமரையோ, டெல்லி சென்று கேபினட் அமைச்சர்களையோ சந்திக்கவில்லை. அப்படி இருக்கையில் ஏன் தமிழகத்திற்கு இப்படி ஒரு முதல்வர் தேவை.

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க ஒரு முதல்வரா
5 ஆண்டில் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க மட்டும் ஒரு முதல்வர். சாராய ஆலை அதிபரிடம், கிராணைட் கம்பெணி முதலாளிகளிடம் மணல் கொள்ளையர்களிடமும் மட்டும் மாதமாதம் ரூ.100 கோடி முதல் வருடத்திற்கு ரூ.1000 கோடிவரையில் சம்பாதிக்கவா? ஒரு முதல்வர்.

இவர் நமக்குத் தேவையில்லை
ஜெயலலிதாவின் கூட்டத்தில் அவரின் பேச்சு மக்களை கவர்ந்து இழுப்பது இல்லை. மக்களை பார்க்காத முதல்வர், மக்களை அனுக முடியாத முதல்வர் நாட்டிற்கு எதற்காக தேவை.

நான் இல்லையென்றால்
கடந்த காலத்தில் நான் இல்லையென்றால் ஜெயலலிதாவை ஹைதராபாத்திற்கு பல பேர் பார்சல் செய்து அனுப்பி வைத்திருப்பார்கள். அப்போது நான் தான் புதுக்கோட்டையில் இருந்து அடியாட்களை கொண்டுபோய் வைத்து அவர் தமிழ்நாட்டு அரசியலில் நீடித்து நிற்க ஏற்பாடு செய்தவன். நியாயமாக பார்த்தால் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தற்கு பதில் நான் தான் முதல்வராக இருந்திருக்க வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications