நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரண்டு கார்கள் - 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி; 11 பேர் படுகாயம்
ராசிபுரம்: சேலம் அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர்
சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், இவ்விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் மஞ்சினியைச் சேர்ந்த குடும்பத்தினர் நாமக்கல் மாவட்டம், வையப்பமலை அடுத்த பருத்திப்பள்ளியில் உள்ள கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஆம்னி காரில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். காரில் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் இருந்தனர். காரை டிரைவர் சாந்தகுமார் என்பவர் ஓட்டினார்.
இதேபோல் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஐந்து பேருடன் டாடா இண்டிகா காரில் ஆத்துார் அடுத்த தலைவாசல் காட்டுகோட்டைக்கு விருந்துக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை ஆனந்த் ஓட்டினார்.
இந்நிலையில் நேற்று மதியம் 3:40 மணிக்கு ஆயில்பட்டி அருகே இரண்டு கார்களும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஆம்னி காரில் சென்ற டிரைவர் சாந்தகுமார், பாப்பாத்தி, பெரியம்மாள், மூன்று மாத கைக்குழந்தை ஒன்று, இண்டிகோ காரில் சென்ற ஆனந்த், அவரது இரண்டரை வயது குழந்தை, என ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
படுகாயம் அடைந்த 11 பேர் சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications