ஐ.ஏ.எஸ். தேர்வில் ஆங்கிலத்தை நீக்கினால் அந்த இடத்திற்கு இந்தி வந்துவிடும் அபாயம்: கி. வீரமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் ஆங்கிலத்தை அறவே ஒழித்துவிட்டால் அந்த இடத்தில் உடனடியாக மாநில மொழிகள் இடம் பெறாது; மாறாக இந்தி மொழிதான் சந்தடி சாக்கில் ‘கந்தப் பொடியைத் தூவிய கதையாக, உள்ளே நுழைந்த திடீர் மணமகனாகி' விடும் நடைமுறை அபாயம் அதனுள் ஒளிந்திருக்கிறது என்பதை இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத மாநில மக்கள் (தமிழ் மக்கள் மட்டுமல்ல) உணர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

UPSC exams: K. Veeramani's worry

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகள் இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களிலும் வெவ்வேறு மொழி பேசுவோர் அனைவருக்கும் உண்மையான சமவாய்ப்பு அளித்து சமூகநீதியை (அரசியல் சட்டம் வழங்கியுள்ள உத்தரவாத உரிமை, சலுகை அல்ல) வழங்கிடும் வகையில் நடத்தப்படுதல் வேண்டும்.

அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22.

இவைகளில் சமஸ்கிருதம் தவிர மற்ற பல மொழிகளும் மக்களின் பேச்சு வழக்கில் உள்ளவை. எழுத்து வழக்கில் எல்லா மொழிகளும் உள்ளன. தமிழ் செம்மொழியாகும் என்ற அந்த அறிவிப்பு - கலைஞர் அவர்களின் பெரு முயற்சி காரணமாக வெளி வந்த பிறகே உயர் தனிச் செம்மொழி என்ற பட்டியலில் கூறப்பட்ட சமஸ்கிருதம் என்ற வடமொழிக்கும் அந்த சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

இந்நிலையில் மத்திய தேர்வாணையம் சார்பில் (U.P.S.C.) நடத்தப்படும் தேர்வுகளில் ஆங்கில அறிவை செம்மைப்படுத்தும் வகையில் தேர்வுக்கான பாடம் மிகக் கடினம் என்று பெரும்பாலான வடமொழிகளின் மாநில இந்தி மாணவர்கள் கோரிக்கையை ஏற்று, அந்த மதிப்பெண் - தேர்வுக் கணக்கில் கொள்ளப்படாது என்று நேற்று நாடாளுமன்றத்தில் அத்துறைக்குரிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் அறிவித்து, இந்தி பேசும் வட மாநில மக்களின் நலனுக்கு வகை செய்து கொடுத்துள்ளார்.

அதே நேரத்தில், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து தேர்வெழுதும் மாணவர்களின் கோரிக்கையான அவரவர் தாய் மொழியில் கேள்வித் தாள்கள் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை ஏனோ இன்னமும் ஏற்கத் தயங்குகிறது மத்திய அரசு. இதில் என்ன பெரிய சுமை மத்திய அரசுக்கு உள்ளது என்பது நமக்குப் புரியவில்லை! ஆங்கிலத்தின் கடுமையான சோதனையைக் குறைக்கலாமே தவிர, ஆங்கிலத்தின் மதிப்பெண் அறவே எடுத்துக் கொள்ளப்படாது என்றால், மறைமுகமாக இந்தியை ஆட்சிமொழியாக்கும் முயற்சி என்றே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆங்கிலம் அனைத்து மாநில மக்களுக்கு (கிழக்கு மாநிலங்களைத் தவிர) அதிகம் புழக்கத்தில் இல்லாத - தாய் மொழி போன்ற மொழி அல்ல என்பதால், போட்டிகளிடையே, ஏற்படும் சோதனை அனைத்து மாநில மக்களுக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்பட்டு, மற்றவைகளைக் கொண்டு மதிப்பிடும் வாய்ப்பு அதன்மூலம் ஏற்படக்கூடும். (The disadvantage is equallydistributed to all State Candidates). அதனை ஓரளவு கணக்கில் எடுத்துக் கொள்வது தேவையே. அது மட்டுமல்லாமல், பல மொழிகள் பேசும் மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்று, மூன்றில் ஒரு பகுதி, பிற மாநிலங்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.காரர்கள் அனுப்பப்படும்போது இணைப்பு மொழி அங்குள்ள நிர்வாகத்தோடு தொடர்புக்கு, மத்திய அரசின் தொடர்புக்கும், ஆங்கில மொழி அறிவு முக்கியம் அல்லவா?

ஆங்கிலத்தை அறவே ஒழித்துவிட்டால் அந்த இடத்தில் உடனடியாக மாநில மொழிகள் இடம் பெறாது; மாறாக இந்தி மொழிதான் சந்தடி சாக்கில் ‘கந்தப் பொடியைத் தூவிய கதையாக, உள்ளே நுழைந்த திடீர் மணமகனாகி' விடும் நடைமுறை அபாயம் அதனுள் ஒளிந்திருக்கிறது என்பதை இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத மாநில மக்கள் (தமிழ் மக்கள் மட்டுமல்ல) உணர வேண்டும்.

அனைத்து மொழிகளிலும் கேள்வித்தாள் இருந்தால்தான் (உதாரணமாக தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்களுக்கு தமிழில் வினாத்தாள் அவசியம் தேவை) அவர்களால் அதனை நன்கு உள்வாங்கிக் கொண்டு எழுத முடியும்.

இப்பிரச்சினையில் மத்திய அரசும், மத்திய தேர்வாணையமும், ஒரு தெளிவான, இணக்கமான அனைத்து மாநில மொழியாளர்களான இந்தியக் குடி மக்களுக்கு சமூகநீதி, சம வாய்ப்பு அதன் மூலம்தான் வாய்ப்புகள் ஏற்படுத்த முடியும்.

சிங்கப்பூரின் பிரபல ஆட்சியாளர் என்று புகழ்பெற்ற மேனாள் பிரதமரும், நவீன சிங்கப்பூரை உருவாக்கியவருமான திரு.லீக்வான்யூ அவர்கள் (91 வயது) தன் மொழிக் கொள்கைபற்றி எழுதியுள்ள ஒரு நூலில் ஆட்சி மொழி பற்றிய ஒரு முக்கிய (தேர்ந்த) கருத்துரையை அறிவித்துள்ளார்.

‘‘சிங்கப்பூரின் ஆட்சிமொழியாக எந்த மொழியை வைப்பது என்கிற பிரச்சினை எழுந்தபோது, பலரும் என்னிடம் மிகப்பெரும்பான்மையினரான (76 சதவிகிதம்) சீனர்கள் சிங்கப்பூர்காரர்களாக இருப்பதால் அந்த மொழியையே வைத்து விடலாம் என்றனர். நான் அது சரியான தீர்வாகாது. மலாய் மொழிபேசும் மலாய்க்காரர்கள் உள்ளனர். இந்தியர்கள் - தமிழர்கள் உள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மையினர் மொழியை ஆட்சி மொழியாக வைத்தால் அது திணிக்கும் எண்ணத்தைத்தான் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும்.

எல்லா மொழிகளுக்கும் சமவாய்ப்பு சீனமொழி, மலாய்மொழி, தமிழ்மொழி, ஆங்கிலம் என்று அறிவிப்புகள் வந்தாலும் கூட ஆங்கிலம் என்றால் எல்லோருக்கும் உள்ள அதன் வசதிக் குறைவு (Disadvantage) சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டால் அனைவருக்கும் வசதிக் குறைவிலும் சமநிலை ஏற்படும் - இதனால் பாரபட்சமற்ற நிலையும் உருவாகும் என்று கூறி நடைமுறைப்படுத்தினார்.

இதன் மூலம் 72 சதவிகித சீனர்கள், 10 - 12 சதவிகித மலாய்கள், 8 சதவிகித இந்திய - தமிழர்கள் எல்லோருக்கும் சமவாய்ப்பை உறுதிப்படுத்தினார் என்பது இங்கே சுட்டிக் காட்டப்படவேண்டிய ஒன்றாகும். இந்த அணுகுமுறை சிங்கப்பூரைவிட இந்தியாவுக்கு அதிகமாகவே பொருந்தக் கூடியதாகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+