சோனியா, ராகுலை கோபமடைய வைத்த வாசன்… உளவுத்துறையை விட்டு விசாரித்த தலைமை
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு கூட்டணி, தொகுதிப்பங்கீடு முடிந்து பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டன திராவிடக்கட்சிகள். தமிழக காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்களை அறிவிக்கவே உன்னை பிடி... என்னைப் பிடி என்ற நிலைமைதான் இன்னமும் நீடிக்கிறது.
முதலில் கொடுத்த வேட்பாளர்கள் பட்டியல் சரியில்லை என்று காங்கிரஸ் மேலிடம் சொல்லவே... மறுபடியும் முதல்ல இருந்தா... என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார் தமிழகத் தலைவர் ஞானதேசிகன்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்த தாமதம்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொய்வு ஏற்பட காரணம் என்று லோக்சபா தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை சிக்கலை கடந்த வாரம் டெல்லியில் மீடியாக்களிடம் கொட்டித்தீர்த்தார் ஜி.கே.வாசன்.
வாசனின் இந்த கருத்து காங்கிரஸ் தலைமையில் உள்ள சோனியா, ராகுல் போன்றவர்களை ஆத்திரம் அடைய வைத்துவிட்டது. 'காங்கிரஸை விட்டு வாசன் போகப்போகிறாரா?' என்று அகமது படேலிடம் ராகுல் கேட்டாராம். அதோடு மட்டுமல்லாது மத்திய உளவுத் துறைக்கும் உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்றதாம்.

கட்சி உடையக்கூடாது
ஜி.கே.வாசனின் மூவ் என்ன என்பது பற்றி உளவுத்துறையினர் ஒருபுறம் விசாரிக்க,
இதுபற்றி விசாரிக்கும் பொறுப்பை குலாம்நபி ஆசாத்திடம் கொடுத்த காங்கிரஸ் தலைமை. 'இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாது' என்று கட்டளை போட்டதாம்.

தேர்தல் பேச்சுவார்த்தை
உடனடியாக ஜி.கே.வாசனிடம் பேசியிருக்கிறார் ஆசாத். ஆனால் அவருக்கு பிடி கொடுக்காமல் சென்னை வந்து விட்டார் வாசன். ''சென்னை வந்த பிறகு மறுபடியும் ஆசாத் போன் செய்து பேசியுள்ளார். 'இரண்டு மாதங்களாக தமிழகம் பற்றியே நீங்கள் கவலைப்படவில்லை. யாரோடு கூட்டணி என்று பேசவே இல்லை, இப்போது ஏன் திடீரென்று பேசுகிறீர்கள்?' என்று கேட்டாராம் ஜி.கே.வாசன்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை
அதோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டு பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை பார்வையாளராகப் போட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் பேச்சுவார்த்தைகளை எல்லாக் கட்சிகளும் மூன்று மாதங்களாக நடத்தி வருகிறது. ஒரு தடவைகூட அவர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. கட்சித் தலைவர்களைச் சந்திக்கவில்லை, கூட்டணி சேருகிறார்களோ, இல்லையோ... கலைஞரையோ ஸ்டாலினையோ, விஜயகாந்த்தையோ அவர் வந்து பார்த்துப் பேச வேண்டியதுதானே. தமிழ்நாட்டை மொத்தமாக மறந்துவிட்டு, இப்போது நான் சொன்னதும் என்னை அழைத்துப் பேசுகிறீர்களா?' என்றாராம் ஜி.கே.வாசன்.

டெல்லிக்குப் போன தலைவர்கள்
இது ஒருபுறம் இருக்க, உடனடியாக ஞானதேசிகன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன் ஆகியோரை டெல்லிக்கு அழைத்தார் ஆசாத். ஆனால் வாசன் போகாமல் சென்னையிலேயே தங்கிவிட்டார்.

தனிக்கட்சி திட்டமா?
'டெல்லியில் பேட்டி கொடுத்துவிட்டு ஜி.கே.வாசன் சென்னை வந்துவிட்டார் என்பதை அறிந்து அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் திரண்டுவிட்டார்கள். 'இனிமேல் இந்தக் கட்சியில் நமக்கு மரியாதை இருக்காது. அவர்கள் தமிழ்நாட்டையே மறந்துவிட்டார்கள். மீண்டும் த.மா.கா. அமைத்துவிடலாம்' என்று பலரும் ஆலோசனை சொன்னார்கள். ஆனால், அதனை மறுத்துப் பேசியிருக்கிறார் ஜி.கே.வாசன்.

கட்சியை உடைக்கும் எண்ணமில்லை
'தனிக்கட்சி அமைக்கும் சூழ்நிலை இப்போது இல்லை. கூட்டணி பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தால், நம்மால் மரியாதைக்குரிய நடவடிக்கைகளைச் செய்திருக்க முடியும். அதற்கு தலைமையைச் சுற்றி இருப்பவர்கள் சரியான பாதையைக் காட்டவில்லை, அந்த வருத்தத்தில்தான் இப்படிப் பேசினேன் என்று கூறினாராம் வாசன். இந்த நேரத்தில் கட்சி ஆரம்பித்தால் சோதனை யான நேரத்தில் கட்சியை உடைத்துவிட்டார் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். எனவேதான் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்தார் ஜி.கே.வாசன் என்றும் அவரது ஆதரவாளர்கள்.

10ல் தொடங்கி 5ல் நின்ற காங்கிரஸ்
தி.மு.க-விடம் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளையும் புதுவையில் ஒரு தொகுதியையும் சேர்த்து 10 தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்டார்கள். அதன் பிறகு 8+1 கேட்டார்கள். அதன் பிறகு 7+1 கேட்டார்கள். அப்படியே இறங்கி ஐந்து தொகுதிகள் தந்தால் போதும் என்று கேட்டார்கள். இந்தத் தகவல் ஜி.கே.வாசனுக்குக் கிடைத்தது. ஐந்து தொகுதிகளையும் வாங்கிக் கொண்டு போட்டியிடுவது கேவலம் என்று நினைத்துத்தான் தனது ஆதங்கத்தை கொட்டினார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள் ஜி.கே.வாசன்.

பேச வேண்டியவர்களிடம் பேசலையே
தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் ப.சிதம்பரம் அல்லது ஜி.கே.வாசன் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை விடுத்து குலாம்நபி ஆசாத் பேசினார். அவரோ, கனிமொழியிடம் சொல்லியாச்சு, டி.ஆர்.பாலுவிடம் பேசியாச்சு என்பதையே சாதனையாக ஆசாத் சொல்லிக்கொண்டு இருந்தார். இது கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களால் பரிசீலனை செய்யப்பட்டதாகவே தெரியவில்லை. அதனால்தான் ஜி.கே.வாசன் ஆத்திரப்பட்டு பேசினார் என்றும் வாசன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ யாருடனும் கூட்டணியின்றி தமிழகத்தில் தனித்து தைரியமாக களமிறங்கப் போகிறது காங்கிரஸ் கட்சி. ஆனால் 40 தொகுதிக்கும் சரியான வேட்பாளர்கள் போட்டியிட தயாராக இருக்கிறார்களா? என்பதே தமிழக வாக்காளர்களின் கேள்வி.












Click it and Unblock the Notifications