மக்கள் நல கூட்டு இயக்கத்தில் சேர வைகோ அழைப்பு: செவி சாய்ப்பாரா கேப்டன்?
சென்னை: சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டு இயக்கத்துடன் தேமுதிக இணைய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் விஜயகாந்த் அதற்கு செவி சாய்ப்பாரா என்பதை சிதம்பரத்தில் மக்கள் பணி கூட்டத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ஆகியவை இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கத்தை உருவாக்கின. இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபைக்கு 2016ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் மக்கள் நல கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தினை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ம.தி.மு.க. நிர்வாகிகள் செந்திலதிபன், ஈஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் பி.சம்பத், கே.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மக்கள் நல கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்ட வரைவு அறிக்கையை தயாரித்தனர். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நல கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் இந்த வரைவு அறிக்கை வைகோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
நவம்பர் 2ல் அறிவிப்பு
கூட்டத்தில் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வரும் 2ம்தேதி ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வெளியிடப்படும். அப்போது எங்கள் கூட்டியக்கத்தில் வேறு சில கட்சிகள் இடம் பெறுவது மற்றும் தேர்தல் தொடர்பான கூட்டணி அறிவிப்புகளை வெளியிடுவோம் என்றார்.
விஜயகாந்துக்கு அழைப்பு
சமீபத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஒன்றாக வந்த நானும், விஜயகாந்தும் நிறைய அரசியல் பேசினோம். அது பற்றி இப்போது விரிவாக சொல்ல முடியாது. என்றாலும் மக்கள் நலக்கூட்டியக்கத்துக்கு தே.மு.தி.க. வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நல்லதே நடக்கும். இதிலேயே எல்லா அர்த்தமும் அடங்கி இருக்கிறது என்றார்.
முதல்வர் வேட்பாளர்
தங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வரும்பட்சத்தில் மக்கள் நலக்கூட்டியக்கத்தின் தலைமை பொறுப்பை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுக்க வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர தே.மு.தி.க. தலைமையில் 5 கட்சிகளும் ஒரே அணியாக செயல்பட வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. எனவே விஜயகாந்த் தங்கள் கூட்டியக்கத்துக்குள் வருவார் என்று ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
வாக்கு சதவிகிதம்
கடந்த தேர்தல்களில் கிடைத்த ஓட்டுக்கள் அடிப்படையில் ஆய்வு செய்தால் தே.மு.தி.க.வுக்கு சுமார் 12 சதவீத வாக்குகள் உள்ளது. ம.தி.மு.க.வுக்கு 3.5 சதவீத ஓட்டுக்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சதவீத ஓட்டுக்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 1.08 சதவீத ஓட்டுக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1.49 சதவீத ஓட்டுக்கள் உள்ளன. இந்த 5 கட்சிகளும் ஓரணியில் திரண்டால் 15 சதவீதம் முதல் 17 சதவீத ஓட்டுக்களை பெறும் என்று தெரிகிறது. இந்த ஓட்டுக்கள் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி - தோல்வியை நிர்ணயம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
பஞ்சபாண்டவர் அணி
2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டு இயக்கம் தனித்துவமும், முக்கியத்துவமும் பெறும். ஆனால் மக்கள் நலக் கூட்டியக்கத்தில் தே.மு.தி.க. சேருமா என்பதை பொருத்தே இத்தகைய சூழ்நிலை உருவாகும். அந்த சூழ்நிலையை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.
எந்தப்பக்கம் சாய்வார் விஜயகாந்த்
தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க பாஜக ஓசையின்றி செயல்பட்டு வருகிறது. அதுபோல தி.மு.க. தரப்பிலும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி ஏற்படுத்தி கொள்ள முயற்சி நடக்கிறது. இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டியக்கமும் விஜயகாந்த்தை தங்கள் அணியில் இணைக்க ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
விஜயகாந்த் மனநிலை
வைகோ வெளியிட்ட இந்த தகவலால் மக்கள் நலக்கூட்டியக்கத்தில் விஜயகாந்தின் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் விஜயகாந்தின் மனநிலை எப்படி இருக்கும் என்பது இதுவரை கணிக்க முடியாதபடி உள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க.வுக்கு எதிராக தீவிரமாக பேசி வருகிறார். நேற்று அவர் தனது ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மணலூர் பேட்டையில் பேசுகையில், அ.தி.மு.க. வெற்றியை தடுக்க நான் எந்த தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
பிடி கொடுக்கவில்லை
விமானத்தில் வைகோ பேசியதற்கு பிடி கொடுக்காத விஜயகாந்த், தேர்தலுக்குத்தான் இன்னும் நிறைய மாதங்கள் இருக்கிறதே என்று பட்டும் படாமலும் சொல்லி இருக்கிறார்.
தேர்தல் நெருக்கத்தில்தான் விஜயகாந்த எந்த முடிவையும் எடுக்க இருக்கிறாராம். ஆனால் அவரை உடனடியாக அறிவிக்க வைக்க மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முயற்சிகள் எடுத்து வருகிறார். விஜயகாந்த்துக்கு ஒரு கருத்தை இவர் சொல்லி அனுப்பி இருக்கிறாராம். ‘உங்களது கட்சியே தி.மு.க-வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டதுதான். தி.மு.க-வையும், அ.தி.மு.க-வையும் சாராத வாக்காளர்கள்தான் உங்களது வாக்கு வங்கி. முன்பு அ.தி.மு.க-வுடன் சேர்ந்ததால், அது கொஞ்சம் குறைந்தது. இ்ப்போது தி.மு.க-வுடன் சேர்ந்தால் அது மொத்தமாக முடிந்துபோகும்' என்றாராம் ஜி.ராமகிருஷ்ணன். இதுவும் விஜயகாந்த்தை அதிகமாக யோசிக்க வைத்துள்ளதாம்.
மருமகன் - மச்சினன் கூட்டணி
அதேநேரத்தில் திமுக உடன் தேமுதிக இணையும் என்ற நம்பிக்கை இருக்கிறதாம். காரணம் மருமகனும், மச்சினனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி எத்தனை இடங்கள் என்பது வரைக்கும் முடிவு செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மே மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு நவம்பர் மாதத்தில் இருந்தே பணிகளை தொடங்கி விடுவார்கள் அரசியல் கட்சிகள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.












Click it and Unblock the Notifications