விஜயபாஸ்கர்-செந்தில் பாலாஜி கோஷ்டி ஒரே நாளில் உண்ணாவிரதம்.. ஹை-டென்ஷனில் கரூர்
சென்னை: மருத்துவ கல்லூரி விவகாரத்தை முன்வைத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சட்டசபை உறுப்பினர் செந்தில் பாலாஜி கோஷ்டியினர் கரூரில் ஒரே நாளில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
கரூர் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் மருத்துவக்கல்லூரி வரவிடாமல் தடுப்பதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இருவரின் செயலை கண்டித்து கரூரில் மே 5 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க உள்ளதாகவும், அதற்கு அனுமதி அளிக்கக் கோரியும், கரூர் டிஎஸ்பி.யிடம் மனு அளித்தும் அதை பரிசீலிக்காததால் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி.

ஹைகோர்ட் உத்தரவு
ஹைகோர்ட் புதிய மனு ஒன்றை காவல்துறையிடம் வழங்க செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டது. அதை பரிசீலிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தியது.

பரிசீலனை
இதையடுத்து புதிய மனுவை செந்தில் பாலாஜி, போலீசாரிடம் வழங்கினார். இந்த மனுவை போலீசார் பரிசீலித்து வருகிறார்கள். அரசுக்கு எதிராக ஆளும் கட்சி எம்எல்ஏவே உண்ணாவிரதம் இருப்பது சரியாக இருக்காது என முதல்வர் நினைப்பதால் போலீசார் தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளனர்.

போட்டி உண்ணாவிரதம்
இந்த நிலையில், விஜயபாஸ்கர் ஆதரவாளர் ஒருவர் அதே நாளில் கரூரில் உண்ணாவிரதம் இருக்க போலீசாரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளார். இரு தரப்பும் ஒரே நாளில் உண்ணாவிரதம் இருந்தால் மோதல் ஏற்பட்டு, சட்டம்-ஒழுங்கு பாதிப்படையும் வாய்ப்பு உள்ளதால் கரூரில் பரபரப்பு நிலவுகிறது.

சட்டம்-ஒழுங்கு
இதையே காரணமாக வைத்து, செந்தில் பாலாஜி கோரிக்கையை நிராகரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதிமுகவின் உட்கட்சி பூசலால் போலீசாருக்கும், கரூர் பொது மக்களுக்கும் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.












Click it and Unblock the Notifications