என்னதான் நடக்கிறது சென்னை உயர் நீதிமன்றத்தில்?
-ஆர்.மணி
‘ஒரு காலத்தில் புகழ்பெற்ற சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று நடந்து கொண்டிருப்பவை எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. முன்பெல்லாம் நாங்கள் இளம் வழக்கறிஞர்களாகவும், சட்ட மாணவர்களாகவும் இருக்கும் பொழுது, எங்களது ஆசிரியர்கள், ஓய்வு நேரங்களில் சென்னை உயர்நீதி மன்றத்தில் நடக்கும் வாதப் பிரதிவாதங்களைப் போய் பாருங்கள் என்று கூறுவார்கள். இன்று நிலைமை மிகவும் மோசமாக போய் விட்டது. சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள நீதிபதிகள் ஒரு வித அச்சத்துடனேயே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரம் வழக்கறிஞர்கள் கூட்டமாக நீதிமன்ற அறைக்குள்ளேயே வந்து போராடுவார்களோ என்றே அச்சமாக உள்ளது!'
-இந்த வார்த்தைகளை சொன்னவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹெச்.எல் தத்து!

திங்கட்கிழமை, செப்டம்பர் 21 ம் தேதி உச்ச நீதி மன்றத்தில், நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் பொழுதுதான் தலைமை நீதிபதி இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். இது செப்டம்பர் 22 ம் தேதி அனைத்து முன்னணி ஆங்கில நாளிதழ்களிலும் முதல் பக்கச் செய்தியாகவே வந்திருக்கிறது.
எந்த வழக்கு விசாரணையின் பொழுது இந்தக் கருத்துக்களை தலைமை நீதிபதி கூறியிருக்கிறார் என்பதுதான் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது. சில மாதங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதி மன்ற தனி நீதிபதி சி.எஸ். கர்ணன், தமிழ் நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடக்கவேண்டிய நியமனங்கள் குறித்து ஒரு தீர்ப்பினை வழங்குகிறார். இந்த தீர்ப்புக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் தடை விதிக்கிறது. ஆனால் இந்த தடையை ஏற்க மறுத்த நீதிபதி கர்ணன், தனது தீர்ப்புதான் செல்லுமென்றும், டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு செல்லுபடியாகாதென்றும்.. அதனோடு நிற்காமல், தனது தீர்ப்பை பின்பற்றாமல் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை ஏற்று நடந்தால் நீதி மன்ற அவமதிப்பு தொடர வேண்டியிருக்கும் என்றும் தமிழ் நாடு அரசு தேர்வாணையத்துக்கு கடிதம் எழுதுகிறார்.
மேலும் வரலாறு காணாத நிகழ்வாக, சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் பதிவு செய்து விடுகிறார். இது போதாதென்று, தான் தலித் என்பதால் தன்னை தலைமை நீதிபதி நிந்திப்பதால், தேசீய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையத்தில் நீதிபதி கவுல் மீது புகார் கொடுக்கப் போவதாகவும் கூறி விடுகிறார். இது ஒரு அசாதாரண சூழ்நிலை.
தனி நீதிபதியின் தீர்ப்பு தான் செல்லும், டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு உங்களைக் கட்டுப்படுத்தாதென்று ஒரு தனி நீதிபதி கூறுவது பெரும் சட்ட சிக்கலாகிறது. மேலும் தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கு உரிய பணிகள் ஒதுக்கப் படவில்லை என்றும் நீதிபதி கர்ணன் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதமும், இதுவரையில் இல்லாத அசாதாரணமான சூழ்நிலையை சென்னை உயர்நீதி மன்ற வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே உருவாக்கி விட்டது.
இந்தக் கட்டத்தில்தான் அவசர அவசரமாக, சென்னை உயர்நீதி மன்றமே ஒரு மனு தாரராக உச்ச நீதி மன்றத்தை நாடுகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தின் பதிவாளர் உச்ச நீதி மன்றத்திலும் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்கிறார். சென்னை உயர்நீதி மன்றத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் ஆஜராகிறார். உச்ச நீதி மன்றம் உடனடியாக நீதிபதி கர்ணன் முன்னுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கிறது. மேலும் இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் தானே முன் வந்து எந்த உத்திரவுகளையும் பிறப்பிக்கக் கூடாதென்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிடுகிறது. இந்த மூல வழக்கின் அடுத்த கட்ட விசாரணதான், செப்டம்பர் 21 ம் தேதி நடந்தது. அப்போது கே கே வேணுகோபால், நீதிபதி கர்ணன் விவகாரத்தை விட, அதாவது மூல வழக்கை விட, தற்போது பற்றியெறிந்து கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் விவகாரம் தான் முக்கியமானதென்று குறிப்பிடுகிறார்.
வழக்கறிஞர்கள் விவகாரம் இதுதான் - உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக உத்திரவிட வேண்டும் என்று கூறி சில வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் பெஞ்ச் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பதாகைகளையும் ஏந்தி வந்திருந்தனர். இதில் கோபமடைந்த தலைமை நீதிபதி இந்த நிலைமையை தடுக்கத் தவறியதற்காக தமிழக போலீஸை சாடுகிறார். மாநில போலீஸ் மீது நம்பிக்கை இல்லையென்றும், மத்திய தொழிற் பாதுகாப்பு படை பாதுகாப்பு சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வழங்கப் பட வேண்டும் என்றும் கூறுகிறார்.
மற்றோரு விவகாரம், ஹெல்மெட் கட்டாயச் சட்டத்தை எதிர்த்து, உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம் சம்மந்தமானது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள இரண்டு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வரவழைக்கப் பட்டனர். இவர்கள் வந்த போது, சுமார் 150 வழக்கறிஞர்களும் நீதிமன்ற அறைக்குள் நுழைய முற்பட்ட போதுதான் பிரச்சனை வெடிக்கிறது. கோஷங்கள் எழுப்ப படுகின்றன. நீதிபதிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப படுகின்றன.
இதனிடையே மதுரையில் ஊர்வலமாகப் போன வழக்கறிஞர்கள் ஊழல் செய்த நீதிபதிகள் என்று நான்கு பேரின் பெயர்களையும் வெளியிடுகிறார்கள். இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாகத்தான் செப்டம்பர் 21 ம் தேதி உச்ச நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு கட்டத்தில் வழக்கறிஞர் கே கே வேணுகோபால், உச்ச நீதி மன்றத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நீதிபதிகளை சென்னைக்கு அனுப்பி நிலைமையை அனுமானிக்கவும், கட்டுப் படுத்தவும் உத்திரவிட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் இதனை தலைமை நீதிபதி உடனே மறுத்து விட்டார். ‘இதற்கு அவசியமில்லை. நீதிபதி கவுலுடன் கடந்த சனிக்கிழமை நான் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அவருக்கு நாம் இன்னும் சிறிது காலம் அவகாசம் கொடுக்கலாம்' என்று நீதிபதி தத்து கூறி விட்டார். இவை எல்லாமே அனைத்து பிரதான ஆங்கில பத்திரிகைகளிலும் விலா வாரியாக எழுதப்பட்டிருக்கும் விவரங்கள்தான்.
வழக்கறிஞர்களின் நடவடிக்கைகள் மட்டுமல்ல, ஒரு சில நீதிபதிகளின் நடவடிக்கைகளும் அசாதாரணமானதாக இருப்பதால் தான் விவகாரம் உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளது. ஒரு உயர்நீதி மன்றமே மனுதாரராக, உச்ச நீதி மன்றத்தின் கதவுகளை தட்டியிருப்பதற்கு சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதற்கு முன் ஏதாவது முன்னுதாரணம் உள்ளதா என்று தெரியவில்லை.
இதில் விவகாரம் என்னவென்றால், தவறிழைக்கும் வழக்கறிஞர்களைக் கட்டுப் படுத்தும் அதிகாரம் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு இல்லையென்பதுதான். இந்த அதிகாரம், தமிழ்நாடு பார் சங்கத்துக்கும், இந்திய பார் சங்கத்துக்குமே உள்ளது. ஆனால் இந்த நடைமுறைகள் அவ்வளவு சுலபமானதல்ல. அப்படியே எடுத்தாலும், அந்த நடவடிக்கைகளை எதிர்த்து பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் உயர் நீதி மன்றத்தை நாட முடியும் என்பதுதான்.
வழக்கறிஞர்களின் கோரிக்கை நியாயமானதுதான் என்று கூறும் பலரும், அவர்களது போராட்ட முறைதான் தவறென்று சொல்லுகின்றனர். ‘தமிழை வழக்காடும் மொழியாக கோருவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் களமும், போராட்ட வடிவமும்தான் தவறு' என்று என்னிடம் கூறினார் சென்னை உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஞான்பிரகாசம். இதுதான் பலரது கருத்தாகவும் இருக்கிறது.
தங்களது போராட்ட வடிவம் பற்றிய கவலையில்லாத வழக்கறிஞர்கள் சிலரது போக்கால் அவர்களது உயர்ந்த நோக்கங்கள் சிதைக்கப்படுவது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த நீதித் துறையுமே இன்று சிக்கலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
வழக்கறிஞர்கள் மீதாவது நடவடிக்கை எடுத்து விடலாம். ஆனால் தவறு செய்யும் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பது மிக மிகக் கடினமானது. ஒரு உயர்நீதி மன்ற நீதிபதியையோ அல்லது உச்ச நீதி மன்ற நீதிபதியையோ பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் ‘இம்பீச்மெண்ட் மோஷன்' கொண்டு வர வேண்டும்.
இவையெல்லாம் மிகவும் கடினமான காரியங்கள். தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 60. ஆனால் பணியிலிருக்கும் நீதிபதிகளோ வெறும் 38 தான். இது எந்தளவுக்கு பணிச்சுமையை ஏற்படுத்தும், வழக்குகளின் தேக்கத்திற்கு வழி வகுக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
மோடி அரசு வந்த பிறகு கொண்டு வந்த நீதிபதிகள் நியமனம் பற்றிய புதிய நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது. இதன் காரணமாகவும் நீதிபதிகள் பதிவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட உயர்நீதி மன்ற நீதிபதிகள் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் பலனை அதிகமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் உயர்நீதி மன்றமாக சென்னை உயர்நீதி மன்றம் இருந்து கொண்டிருக்கிறது.
நீதித் துறையில் அதிரடியாக சீர்திருத்தங்கள் கொண்டு வருவதுதான் தற்போது சென்னை உயர்நீதி மன்றம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பது மூத்த வழக்கறிஞர்கள் கருத்து.
இன்று சாமானிய இந்தியனின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதித் துறையில் நிலவும் குழப்பங்கள் விரைவில் முடிவுக்கு வந்து சகஜ நிலைமை திரும்புவதுதான் மக்களுக்கு நல்லது!
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications