பூச்சாண்டி.. ஹலோ மிஸ்டர்.. இது உங்க சர்ச்சா? திமுககாரன் போல பேசாதீங்க.. அண்ணாமலையை சூழ்ந்த பொதுமக்கள்
தர்மபுரி: தர்மபுரியில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு எதிரான கண்டனங்களும், கோஷங்களும் எழுந்ததால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. என்ன காரணம்?
"என் மண், என் மக்கள்" என்ற நடைபயணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார்.. ஒரு மாதத்துக்கு மேலாக அண்ணாமலையின் நடைபயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அந்தவகையில், தற்போது, தருமபுரி மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக நடைபயணம் நடைபெற்றது.
எனவே, மேட்டூரிலிருந்து பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு அண்ணாமலை வந்திருந்தார். அப்போது, வரும் வழியில் பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டியில் உள்ள தூய லூர்து அன்னை மேரி தேவாலயத்திற்கு திடீரென வருகை தந்தார்.

அண்ணாமலை: அப்போது, அண்ணாமலை உள்ளே வரக்கூடாது என்று அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். அதற்கு அண்ணாமலை, "அண்ணே.. நான் சர்ச்சுக்கு வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? சொல்லுங்கண்ணே?" என்று கேட்டார்.
அதற்கு அங்கிருந்த இளைஞர்கள், "மணிப்பூரில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை கொன்னு குவிச்சாங்களே.. அப்போ நீங்க எங்கே போனீங்க? சர்ச்சுகளை இடிச்சாங்களே, ஏன் பாஜக கண்டனம் தெரிவிக்கல? அங்கிருந்த கிறிஸ்தவ மக்களுக்கு ஏன் நீங்க ஆதரவு கொடுக்கல? மணிப்பூரில் நடந்த கலவரத்தில், மக்களின் இறப்பை பற்றி ஏன் கேட்கவில்லை? நீங்கள் மாலை அணிவிக்ககூடாது, சர்ச்சுக்கு உள்ளே வரக்கூடாது, திரும்பி போங்க்" என்று கிறிஸ்தவ இளைஞர்கள் கோஷமிட்டனர்.
மணிப்பூர்: இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அண்ணாமலை, முழக்கமிட்ட இளைஞர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மீண்டும் மணிப்பூரில் கலவரத்தை இளைஞர்கள் முன்வைத்தனர். எங்கள் மக்கள் மணிப்பூரில் தாக்கப்பட்டனர். அதற்கு பாஜக தான் காரணம்.. இந்த இடம் மிகவும் புனிதமானது, இங்கே நீங்கள் வரக்கூடாது" என்று மீண்டும் ஆவேசமாக சொன்னார்கள்.
இதனையடுத்து மாநில தலைவர் அண்ணாமலை மிகப்பொறுமையுடன், "மணிப்பூரில் மோதல் ஏற்பட்டதே 2 தரப்பு கிறிஸ்தவர்கள் இடையே.. இரண்டு சமூகத்துக்கு இடையே நடக்குற சண்டை. இரண்டு தரப்பிலுமே கிறிஸ்தவர்களும் இருக்காங்க.. இந்துக்களும் இருக்காங்க. அதுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் கிடையாது. திமுககாரங்க தான் அதுக்கு மதச்சாயம் பூசுறாங்க. அதுல உண்மை இல்லை" என்று விளக்கம் தந்தார்.
அதற்கு இளைஞர்கள், "மணிப்பூர் கலவரத்தின்போது, மத்திய பாஜக அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்று தங்களுக்கு தெரியும்?" என்ற அந்த பகுதி இளைஞர்கள் காட்டமாக சொன்னார்கள். இதனால், கடுப்பான அண்ணாமலை, திமுககாரன் போல பேசக்கூடாது என்று காட்டமாக சொன்னார்.

மத அரசியல்: "நாங்கள் திமுகவை சேர்ந்தவர்கள் கிடையாது" என்று பதிலளித்த அப்பகுதி மக்கள், மத அரசியல் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தினார்கள்... உடனே அண்ணாமலை, "யார் மத அரசியல் செய்கிறார்கள் என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.. ஆனாலும், இளைஞர்கள் தொடர்ந்து பேசியதால், வாக்குவாதமும் முற்றியது..
உடனே, கொந்தளித்த அண்ணாமலை, "ஹலோ மிஸ்டர்.. இது உங்களோட சர்ச்சா? உங்க பேருலயா இந்த சர்ச் இருக்கு? எல்லாருமே, எல்லா கோயிலுக்கும் போறதுக்கு உரிமை இருக்கு தெரியுமா தெரியாதா? நீங்க யாரு என்னை சர்ச்சுக்கு போகக்கூடாதுனு சொல்றதுக்கு?
என்ன கூட்டமா வந்தா நான் பயந்துருவேனு நினைக்கிறீங்களா? பத்தாயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்தினால் என்ன செய்வீர்கள்? நான் மாதாவுக்கு மாலை போடாம இங்கேயிருந்து போக மாட்டேன். உங்களால முடிஞ்சதை செய்துக்கோங்க.. என்ன பூச்சாண்டி காட்டுறீங்களா? அண்ணே வாங்க.. சர்ச்சுக்குள்ள போவோம்" என்றார் அண்ணாமலை
பாதுகாப்பு போலீசார்: "எங்கள் அன்னைக்கு மாலை அணிவித்து இழிவுப்படுத்த வேண்டாம் என்று சொல்லி மாலை அணிவித்து இழிவுப்படுத்த வேண்டாம் என்று அணிவிக்க விடாமல் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினர்... இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார், கோஷமிட்டவர்களை அப்புறப்படுத்தினார்கள்.. லேசான தடியடி நடத்தி, கூட்டத்தையும் கலைத்தனர்.
பிறகு, அண்ணாமலை லூர்து மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பாப்பிரெட்டிப்பட்டிக்கு கிளம்பி சென்றார். இந்த சம்பவத்தினால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பதிவு: இதனிடையே, அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளத்தில் தர்மபுரி நடைபயணம் பற்றி பதிவிட்டுள்ளார்.. அதில், "தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள, தூய லூர்து அன்னை திருத்தலத்தில் இறை வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும், நலமுடன் வாழ அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications