தங்க நகைக்கடன் ரூல்ஸ் மாற்றம்? திமுகவும் களத்தில் இறங்கியாச்சு! 30-ல் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: ரிசர்வ் வங்கி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்றும், தங்க நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார்.. ரிசர்வ் வங்கி புதிய நகைக் கடன் விதிகளை திரும்ப வலியுறுத்தி மே 30ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவித்துள்ளார்..
தங்க நகைகளை அடகு வைப்பதற்கு 9 விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது..வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி காரணம் கூறியிருக்கிறது.

புதிய விதிமுறைகள்
அதன்படி, தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும், அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், வங்கிகள்(அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும், தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி என்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அத்துடன், 1 கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதி, அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும், கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும், அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய ஒரு வாரத்துக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும், தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
பெரும் முதலாளிகள்
இந்த புதிய விதிமுறைகளுக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து குறிப்பாக விவசாயிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.. நிபந்தனை இல்லாமல் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் வழங்க வேண்டும், பெரும்முதலாளிகள் பயனடையும் வகையில் ரூ.2 லட்சத்துக்கு மேல் மட்டுமே விவசாய கடன் வழங்கும் நடைமுறையை வங்கிகள் கைவிட வேண்டும், நகைக்கடன் வழங்குவதற்கு நகையை விலைக்கு வாங்கிய ரசீதுகளை விவசாயிகளிடம் கேட்க கூடாது என்று கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்.
நேற்றுகூட திருச்சியில் நகைக்கடன் அறிவிப்பை கண்டித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.. இந்நிலையில், தஞ்சாவூர் திமுகவும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக் கடன் நிபந்தனைகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி மே 30ஆம் தேதி தஞ்சாவூர், தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏகேஎஸ் விஜயன் வெளியிட்டுள்ளார்.
பெரும் துயரத்தில் விவசாயிகள்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே ஒன்றிய பாஜக அரசு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான கொள்கைகளையே அமல்படுத்தி, விவசாயிகள் - தொழிலாளர்கள் - ஏழை மக்களை மென்மேலும் பாதிக்கும் கொள்கைகளையே செயல்படுத்தி, சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.
தேசிய வங்கிகளில் சாமானிய மக்களக்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்காமல், பெரும் நிறுவனங்களுக்கு கடன்களை அள்ளி வழங்கி, பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாராக் கடன் என்று சொல்லி ஒன்றிய பாஜக அரசு தள்ளுபடி செய்கிறது. சாமானிய மக்களின் வரிப்பணமான பல லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளையும் பணக்காரர்களுக்கு வழங்கி வருகிறது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு.
வட்டி அடமானம்
விவசாயிகள், ஏழை மக்கள், நடுத்தர மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு மற்றும் வங்கிகளில் அடமானம் வைத்து விவசாய மற்றும் அவசரத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். அடகு வைத்த நகையை திருப்ப முடியாத மக்கள் வட்டியை மட்டும் கட்டி மறுஅடமானம் வைப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போது ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையான இந்திய ரிசர்வ் வங்கி, இனிமேல் வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும், தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன் பெற முடியாது, ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய நகை கடன் வழஙகப்படும், விவசாயிகளுக்கு நகையை புதுப்பித்து மீண்டும் கடன் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது
10 மணிக்கு ஆர்ப்பாட்டம்
இதுபோன்ற புதிய நிபந்தனைகளை விதித்து விவசாயிகள் - தொழிலாளர்கள் - ஏழை மக்களை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையான இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக் கடன் நிபந்தனைகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி தி.மு.க. விவசாய அணி மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் இணைந்து வருகிற மே 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தஞ்சாவூர், தலைமை தபால் நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. விவசாய அணியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் - கழக விவசாய அணித் தோழர்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications