விவசாயியை ஏமாற்றிய வங்கி.. அடகு வைத்த தங்கத்தை மீட்டவருக்கு 2.5 சவரன் கவரிங் தந்த தஞ்சை வங்கி! ஷாக்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் வங்கியில் அடகு வைத்த நகையை விவசாயி மீட்ட போது அவருக்குப் போலி நகை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை ஆரம்பிக்கும் போது அவர்களின் முதல் சாய்ஸாக எப்போதும் தங்கமே இருக்கிறது. தங்கம் விலை நீண்ட கால நோக்கில் எப்போதும் குறைந்ததே இல்லை.

இதனால் ஏழை மக்கள் மெல்ல மெல்லச் சேமித்து எப்போதும் தங்கத்தையே வாங்குவார்கள். மேலும், சிக்கலான நேரத்தில் காசு வேண்டும் என்றால் தங்கத்தை வைத்து மிக மிக ஈஸியாக நம்மால் பணத்தைப் பெற முடியும்.
தங்கம்: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2013இல் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 2,614 ஆக இருந்தது. இப்போது 2023இல இரண்டு மடங்கிற்கு மேல் தங்கம் விலை அதிகரித்து இப்போது ரூ 5,670ஆக உயர்ந்துள்ளது. இந்த 10 ஆண்டுகள் என இல்லை. எந்தவொரு 10 ஆண்டுகளை எடுத்தாலும் தங்கம் விலை நிச்சயம் அதிகரித்தே இருக்கும். இப்படி தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பதே ஏழை மக்கள் இதில் தங்கள் பணத்தைச் சேமிக்கிறார்கள்.
மேலும், ஆபத்தான காலத்தில் தங்கம் உதவும் என்பதாலேயே தங்கத்தில் முதலீடு செய்வார்கள். அதாவது ஆபத்தான நேரத்தில் வீடு, நிலம் இருந்தால் கூட அதைப் பணமாக மாற்ற அதிக காலம் தேவைப்படும். ஆனால், தங்கத்திற்கு அப்படியில்லை... வங்கிகளில் தங்கத்தை அடகு வைத்தால் சில நிமிடங்களில் அதற்கான பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். கொரோனா காலத்தில் பலருக்கும் இப்படி பெரியளவில் உதவியாக இருந்தது என்னவோ தங்கம் தான்.
அடகு வைத்த விவசாயி: பலரும் அந்த இக்கட்டான நேரத்தில் தங்கத்தை அடகு வைத்தார்கள். அப்படித்தான் இங்கே தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த பாலு என்பவரும் அங்குள்ள தேசிய வங்கி ஒன்றில் நகையை அடகு வைத்துள்ளார். 50 வயதான பாலு அப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டு வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர், ஒரு நெக்லஸ், இரண்டு மோதிரம், மூன்று செயின் என மொத்தம் 68 கிராம் நகையை நடகு வைத்துள்ளார்.
பணத்தை எல்லாம் ஒரு வழியாகப் புரட்டி, நகையை மீட்க இவர் நேற்று வங்கிக்குச் சென்றுள்ளார். வட்டியுடன் சேர்த்து பணத்தைச் செலுத்தியவுடன் நகையை எடுத்து வந்துள்ளனர். அப்போது நகையை எடை போட்ட போது 70 கிராம் இருந்துள்ளது. தான் அடகு வைத்ததை விட இரண்டு கிராம் கூடுதலாக இருந்ததால் அவர் குழம்பிப் போய்விட்டார். இது குறித்து அவர் வங்கி ஊழியர்களிடம் கேட்ட போது, "இதுதான் நீங்கள் அடகு வைத்த நகை" என்று மட்டுமே சொல்லியுள்ளனர்.
கவரிங் நகை: அப்போது நகையைச் சோதனை செய்த போது அது கவரிங் நகை என்பது தெரிய வந்துள்ளது. கஷ்டப்பட்டுச் சம்பாதித்த தங்கத்தை மீட்டுவிடலாம் என வந்தவருக்கு வங்கியில் அதிர்ச்சியே காத்திருந்தது. இது குறித்து விவசாயி பாலு கூறுகையில், "நகையை முதலில் நான் 1.63 லட்சத்திற்கு அடு வைத்தேன். அடுத்து மீண்டும் 1.76 லட்சத்திற்கும்.. 1.91 லட்சத்திற்கும் மறு அடகு வைத்தேன். இப்போது நகையை மீட்கச் சென்றேன்.. பணத்தைக் கொடுத்துவிட்டு நகையைக் கேட்ட போது 2.5 சவரன் கவரிங் நகையைக் கொடுக்கிறார்கள்.

நான் அடகு வைத்ததே 68 கிராம் தான். ஆனால் 70 கிராம் நகையைக் கொடுத்துள்ளார்கள். இதில் இருந்தே மோசடி நடந்துள்ளது தெரிய வருகிறது. வங்கியில் கேட்டால்.. அதுதான் உங்கள் நகை என்று மட்டும் திரும்பச் திரும்ப சொல்கிறார்கள். இந்த 2.5 சவரன் நகையைத் தவிர மற்ற நகைகள் எல்லாம் எங்கள் நகை தான். ஆனால், இதில் மட்டும் கவரிங் நகையை மாற்றிவிட்டார்கள். கவரிங் நகைக்குப் பதிலாக எனது நகையை மீட்டுத் தர வேண்டும்" என்றார்.
சமரசம்: இது தொடர்பாக ஒரத்தநாடு போலீசாருக்கு பாலு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வங்கி சார்பில் சமரசம் பேசப்பட்டதாகத் தெரிகிறது. புகார் தர வேண்டாம் என்றும் உரிய நகையை ஏற்பாடு செய்து தருவதாகச் சமரசம் பேசப்பட்டதாகத் தெரிகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலேயே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications