தாயின் அஸ்தியை கரைக்க.. வாரணாசி செல்லும் ஓபிஎஸ்.. தலைமகனாய் இறுதி மரியாதை!
தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக ஓபிஎஸ் வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தேனி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயாரின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்ட நிலையில், அஸ்தியை கரைப்பதற்காக இன்று வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மதுரையில் இருந்து சென்னை வழியாக வாரணாசி செல்லும் ஓபிஎஸ் உடன் அவரது குடும்பத்தினரும் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று முன்தினம் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடையாததால் மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்-ன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

கதறி அழுத ஓபிஎஸ்
பின்னர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு காலமானார். இந்த விவரத்தை அறிந்த ஓபிஎஸ் சென்னையில் இருந்து உடனடியாக தேனி வந்தார். தனது தாயாரின் உடலைப் பார்த்தும் காலை பிடித்து முகம் புதைத்து கதறி அழுதார் ஓ.பன்னீர்செல்வம். இதன் பின்னர் அருகில் இருந்த குடும்பத்தினர் அவரை தேற்றினர்.

இரங்கல்
ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்தார். அதேபோல் ஓபிஎஸ் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரின் தாயாருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

இறுதிசடங்கு
அதுமட்டுமல்லாமல் அமைச்சர் ஐ.பெரியசாமி, நாம் தமிழர் கட்சியின் சீமான், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் ஓபிஎஸ் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

வாரணாசி செல்லும் ஓபிஎஸ்
தாயார் மறைவால் கலங்கி போயிருக்கும் ஓபிஎஸ்-க்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தனது தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக ஓபிஎஸ் வாரணாசிக்கு புறப்பட்டுள்ளார். மதுரையில் இருந்து சென்னை வழியாக வாரணாசி செல்லும் ஓபிஎஸ், மீண்டும் இன்று இரவே தேனிக்கு வரவுள்ளார். இதில் ஓபிஎஸ் உடன் அவரது மகன்களும் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications