தள்ளி வைக்கும் எடப்பாடி டீம்.. அப்செட்டான தாமரை.. ஓபிஎஸ்ஸிடம் நெருங்கும் பாஜக.. என்னங்க நடக்குது?
தேர்தல் அரசியலில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு எடுபடவில்லை என்ற பேச்சு தற்போது பரவலாக எழுந்துள்ளது. இந்த விஷயத்தைதான் தற்போது ஓபிஎஸ் டீம் கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறார்கள்.
தேனி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்தது முதலாகவே பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி டீம் பாராமுகம் காட்டி வருவதாக கூறப்படும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திடம் தமிழக பாஜக நெருக்கம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக முக்கிய நிர்வாகிகள் அடிக்கடி சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி, ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜகவினர் நெருக்கம் காட்டுவது எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வி ஏற்படுத்திய பின்னடைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது, எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. என்னதான் அதிமுக நிர்வாகிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து கட்சியை கைப்பற்றினாலும், தேர்தல் அரசியலில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு எடுபடவில்லை என்ற பேச்சு தற்போது பரவலாக எழுந்துள்ளது. இந்த விஷயத்தைதான் தற்போது ஓபிஎஸ் டீம் கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறார்கள். அதிமுகவுக்கு தலைமை ஏற்றதில் இருந்து, எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

எடப்பாடி டீம் ஆதங்கம்
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் டீமை சேர்ந்த மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி என்ற தனிநபரை தூக்கியெறிந்தால் மட்டுமே அதிமுக வளரும் என ஓபன் ஸ்டேட்மென்ட் விடுத்தார். மேலும், நெல்லையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் "எட்டுத் தோல்வி எடப்பாடி" என எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி எடப்பாடி பழனிசாமியை வெகுவாக சோர்வடைய செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெற்றி பெறாவிட்டாலும் கூட பரவாயில்லை. மிகக் குறைந்த அளவே வாக்குகளை வாங்கியது எடப்பாடி அணியினரை மிகுந்த ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது. மேலும், பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதுதான் தொடர் தோல்விக்கு காரணம் என்பதும் எடப்பாடி பழனிசாமி அணியினரின் முக்கிய ஆதங்கமாகவும் உள்ளதாக தெரிகிறது.

அதிர்ச்சி தந்த செங்கோட்டையன்
எடப்பாடி அணியின் இந்த அதிருப்தி பாஜகவினருக்கு வெளிப்படையாகவே தெரிந்துள்ளது. இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்க முடியுமா என யோசிக்கும் அளவுக்கு தமிழக பாஜகவினர் சென்றுவிட்டனர். அவர்களின் இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக செங்கோட்டையன் கூறிய கருத்தும் பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா என நிருபர்கள் கேட்டதற்கு, "தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும்" எனக் கூறி பாஜகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் செங்கோட்டையன்.

ஓபிஎஸ்ஸை நெருங்கும் தாமரை
இந்தப் பின்னணியில்தான், பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து பிரிந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். தமிழக பாஜகவையும், தலைமையையும் கடுமையாக விமர்சித்த நிர்மல் குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதால் எடப்பாடி பழனிசாமி மீது பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்கையில், ஓ.பன்னீர்செல்வத்திடம் பாஜக நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தனது தாயார் மறைவை அடுத்து, பெரியகுளத்தில் உள்ள தமது வீட்டில் இருக்கும் ஓபிஎஸ்ஸை பாஜக மூத்த தலைவர்கள் எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்கள். ஓபிஎஸ்ஸுடன் பாஜகவினர் காட்டி வரும் இந்த திடீர் நெருக்கம் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications