மொத்தமாக மாறிக்கிடக்கும் மாஞ்சோலை.. என்ட்ரியான காட்டு விஐபிக்கள்.. சர்வ சாதாரணமாக வந்த ராஜநாகம்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்ட நிறுவனம் விருப்ப ஓய்வு அளித்ததால், வாழ்வாதாரம் இழந்து தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். அங்கு மக்களின் நடமாட்டம் குறைய தொடங்கியதால் வனவிலங்குகள் வெளியில் வரத்தொடங்கின. சுமார் 18 அடி நீள ராஜநாகம் அந்த பகுதியில் உலா வருகிறது.
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் களக்காடு முண்டத்துறை புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, 2 ஆயிரத்து 250 வகை தாவரங்கள், 46 மீன் வகைகள், 19 வகை பாலூட்டிகள், 337 வகை பறவைகளுக்கு இருப்பிடமான இந்த களக்காடு முண்டத்துறை புலிகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் தான் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்துள்ளது.

மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டத்தை சுமார் 95 ஆண்டுகளை கடந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.டி.சி.) என்னும் தனியார் நிறுவனம் நடத்தி வந்தது. இந்நிறுவனத்திற்கான குத்தகை காலம் வருகிற 2028-ம் ஆண்டு முடிய உள்ள நிலையில், அதற்கு மேல் அந்த நிறுவனம் குத்தகை காலத்தை நீடிக்கவில்லை. அங்கு பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்ட நோட்டீஸ் அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டது.
அதன்படி விருப்ப ஓய்வும் அளித்துவிட்டது. பலர் காடுகளை விட்டு வெளியேறிவிட்டார்கள். அதேநேரம் நான்கு தலைமுறையாக மாஞ்சோலையில் பிறந்து வளர்ந்து இயற்கையோடு வாழ்ந்து வரும் தொழிலாளர்களில் அங்கிருந்து பிரிய மனமில்லாமல், விரும்பாமல் அங்கேயே வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மாஞ்சோலை தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள மாஞ்சோலை மின்சார வாரிய அலுவலகம் அருகே சுமார் 10 அடி நீளம் உள்ள ராட்சத ராஜநாகம் ஒன்று சர்வ சாதாரணமாக ஊர்ந்து சென்றுள்ளது. அதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், ராஜ நாகத்தை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராட்சத ராஜ நாகம் ஒன்று இங்கு இருந்த வீடியோ வெளியானது. தற்போது தேயிலை தோட்டம் மூடப்பட்டிருப்பதாலும், ஆள் நடமாட்டம் குறைந்துவிட்டதாலும், மாஞ்சோலையில் யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்போது ராஜ நாகமும் அடிக்கடி வந்து செல்கிறது. இதை கண்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்












Click it and Unblock the Notifications