ஏய்.. ஏய்.. திடீரென டென்ஷனான புஸ்ஸி ஆனந்த்! நடிகர் விஜய் கூறிய அந்த வார்த்தை - பரபரப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் இன்று நிவாரண உதவிகள் வழங்கினார். மேடையில் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டென்ஷனான நிலையில் நடிகர் விஜய் சொன்ன அந்த வார்த்தையால் களநிலவரம் அப்படியே மாறிப்போனது.
தமிழ்நாட்டில் இந்த டிசம்பர் மாதம் மக்களை பெரிய அளவில் சோதித்துள்ளது. கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இங்கு வெள்ளம் வெளியேற்றி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இதன் தொடர்ச்சியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் இரு மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் 30க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். மேலும் கால்நடைகள் இறந்ததோடு மக்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது. அதிகளவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.6 ஆயிரமும், குறைந்த அளவில் வெள்ள பாதிப்பு உள்ள மக்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜயின், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரு மாவட்டங்களுக்கும் வெள்ள நிவாரண உதவிகள் இன்று வழங்கப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1000 பேருக்கு இந்த வெள்ள நிவாரண உதவி என்பது வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் இருக்கும் மண்டபத்தில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இருமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு காய்கறிகள், போர்வை உள்ளிட்டவற்றுடன் ரொக்கப்பணத்தையும் அவர் வழங்கினார்.
இந்த வேளையில் மேடையில் விஜய் நிவாரண உதவிகளை வழங்கி கொண்டிருந்தார். மூதாட்டி ஒருவர் நடிகர் விஜயின் கன்னத்தை தொட்டு அவரை வாழ்த்தியதோடு சிரித்த முகத்தோடு நிவாரண பொருட்களை வாங்கினார். அப்போது நிவாரண பொருட்களின் எடை அதிகம் இருந்ததால் மூதாட்டி தடுமாறினார். இதையடுத்து மேடையில் இருந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மூதாட்டியின் கையில் இருந்த நிவாரண பொருட்களை வாங்கினர்.
அதன்பிறகு அவர் அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றார். அப்போது திடீரென்று டென்ஷனான விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ‛‛ஏய்.. ஏய்..'' எனக்கூறி கையை ஆக்ரோஷமாக அசைத்து ‛‛அங்கிட்டு போ'' என கடிந்து கொண்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கவனித்த நடிகர் விஜய், ‛‛நான் இருக்கிறேன். பொறுமையாக அனைவருக்கும் நிவாரண உதவிகளை தருகிறேன். யாரும் பதற்றம் அடைய வேண்டும்'' எனும் வகையில் கையை அசைத்து சைகை காண்பித்தார். அதோடு புஸ்ஸி ஆனந்தை பார்த்து அவர் ‛‛கூல்.. கூல்..'' எனக்கூறி சாந்தப்படுத்தினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதோடு, விஜயின் இந்த கூலான நடவடிக்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு புஸ்ஸி ஆனந்தின் முகத்தில் இருந்த கோபம் மறைந்து அவரும் கூலானார்.

முன்னதாக நடிகர் விஜய் நிவாரண உதவிகள் வழங்கும் இடத்துக்கு வந்தார். அப்போது விஜயுடன் ஏராளமானவர்கள் மண்டபத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதோடு விஜய் நுழைந்தவுடன் வேகமாக கதவை அடைத்தனர். அப்போது திடீரென்று நடிகர் விஜய் நிலைத்தடுமாறி விழப்போனார். ரசிகர்கள் அவரை தாங்கி பிடித்தனர். அப்போது டென்ஷனான புஸ்ஸி ஆனந்த கதவை வேகமாக மூடிய நபரின் முதுகில் சட்டென அடித்தார். இதுவும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications