180 ஆண்டு பழமை.. திமுகவினரால் நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலத்துக்கு நேர்ந்த கதி.. விளாசும் அதிமுக
திருநெல்வேலி: திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்றாக தாமிரபரணி ஆற்றை கடக்க கட்டப்பட்ட 180 ஆண்டு பழமையான மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் துளையிட்டு திமுகவினர் கட்சி கொடியை நட்டு வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் இன்று போராட்டம் நடத்தி புகாரளித்துள்ளனர்.
திருநெல்வேலி.. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஓடும் மாவட்டமாகும். மேற்கு தொடர்ச்சி உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு திருநெல்வேலியை கடந்து தூத்துக்குடி மாவட்டம் வழியாக கடலில் கலக்கும். இந்த தாமிரபரணி ஆற்றுக்கு குறுக்கே திருநெல்வேலியில் ரயில்வே மேம்பாலம், மற்றும் சாலை மேம்பாலங்கள் உள்ளன.

ரயில்வே மேம்பாலம் என்பது திருநெல்வேலி - திருச்செந்தூரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வாகனங்கள் சென்று வருவதற்கான மேம்பாலம் என்பது திருநெல்வேலி ஜங்ஷன் - வண்ணாரப்பேட்டையை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த சாலை மேம்பாலத்தை கட்டியவர் சுலோசனா முதலியார். இவர் மக்களின் வசதிக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்து திருநெல்வேலி ஜங்ஷன் - வண்ணாரப்பேட்டை இடையே சாலை மேம்பாலத்தை கட்டினார். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த கலெக்டர் உதவியுடன் 1840ல் சிறை கைதிகள் மூலம் இந்த பாலம் கட்ட தொடங்கப்பட்டது. 3 ஆண்டுக்குபிறகு 1843ல் பாலம் பணி முடிவடைந்தது. தற்போது இந்த பாலம் 180 ஆண்டை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. இப்போதும் பாலத்தில் வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த பாலத்துக்கு சுலோச்சனா முதலியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் முன்னெச்சரிக்கையாக தற்போது அந்த பாலத்தின் அருகே புதிய பாலம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று தாமிரபரணியில் 180 ஆண்டு பழமை வாய்ந்த ஆற்று பாலத்தில் திமுகவின் கட்சி கொடி கம்பங்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பழமையான பாலத்தில் ஓட்டை போடப்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த அதிமுகவினர் இன்று அந்த மேம்பாலத்தில் வந்து திடீர் போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை என் கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் அவர்களை வந்து சமாதானம் செய்தனர். போலீசாரிடம் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் இதுதொடர்பாக தச்சை என் கணேசராஜா தலைமையில் திமுகவினர் மீது நடவடிக்கை கோரி திருநெல்வேலி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழங்கப்பட்டுள்ள புகார் மனுவில், ‛‛திருநெல்வேியில் 180 ஆண்டுகள் உதவிகரமாக இருந்து பழமை மாறாது பயன்படுத்தப்பட்டு வருவது தான் சுலோச்சனா முதலியார் மேம்பாலம். சுலோச்சனா முதலியார் தனது சொந்த பணத்தை செலவழித்து கட்டிய தான் இந்த பாலமாகும். இப்பால் அவரது பெயரிலேயே சுலோச்சனா முதலியார் மேம்பாலம் என்று அழைக்கப்படுகிறது.
இன்று (28.1.2024) ஆளும் திமுக கட்சி கொடிக்காக திமுக முக்கிய பிரமுகர்களான கேஎன் நேரு, டிபிஎம் மைதீன் கான் மாவட்ட செயலாளர், அப்துல் வஹாப் எம்எல்ஏ ஆகியோரின் தூண்டுதலின்பேரில் பழமையான சுலோச்சனா முதலியார் பாலத்தின் ஸ்திரத்தன்மையை கெடுக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பாலத்தின் கருவி மூலம் துளையிட்டு கொடி கட்டுவதற்காக சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பாலத்தின் ஸ்திரத்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி .ள்ளது. ஆவேக இந்த மனு கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications