இடையன்குடி தேவாலய மணியில் ஒலித்த தேசிய கீதம்.. வியந்து கேட்ட ஊர் மக்கள்
நெல்லை: இந்திய சுதந்திர தினத்தையொட்டி நெல்லையில் உள்ள ஒரு தேவாலயத்தின் மணியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நாட்டின் 76-வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் படு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் இன்று காலை தேசியக் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்டங்கள்தோறும் ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஆட்சியர்கள் முன்னிலையில் போலீஸாரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. ஆட்சியர் விஷ்ணு தேசியக் கொடி ஏற்றினார். அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். தொடர்ச்சியாக போலீஸாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று அவர் பார்வையிட்டார்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை அருகே உள்ள இடையான்குடி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான, தூய கிறித்துவ தேவாலயத்தில் இன்று காலை தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஸ்பீக்கரிலோ, இசைக்கருவிகளிலோ இல்லாமல் தேவாலயத்தின் மணியில் நேர்த்தியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. கடந்த சில வருடங்களாகவே சுதந்திர தினத்தை போற்றும் வகையில் தேவாலய நிர்வாகம் மேற்கொண்டுவரும், இந்த செயலை இடையான்குடி கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இடையன்குடி கிராமத்தில்தான் ராபர்ட் கார்டுவெல் வாழ்ந்து மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications