திடீரென காலில் விழுந்த ரசிகர்! பதறிய விஜய்.. அடுத்து செய்த சம்பவம்.. கவனம் ஈர்த்த தளபதி - நெகிழ்ச்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நடிகர் விஜய் நிவாரண உதவிகள் வழங்கினார். அப்போது திடீரென ரசிகர் ஒருவர் காலில் விழுந்ததால் பதறிப்போன விஜய் அடுத்த நொடி செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டை பெற்றது. அப்படி என்ன செய்தார் விஜய்? வாங்க பார்க்கலாம்.
கடந்த 17 மற்றும் 18 ம் தேதிகளில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

தமிழக அரசு, மத்திய அரசு சார்பில் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. இருப்பினும் வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் 30க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். மேலும் கால்நடைகள் இறந்ததோடு மக்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் வெள்ளம் பாதிப்புக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிகம் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.6 ஆயிரமும், குறைந்த அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படுகிறது.

இதற்கிடையே தான் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் இன்று வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நடிகர் விஜய் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் இருக்கும் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
நிவாரண உதவிகள் வழங்கியபோது திடீரென்று ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்யின் காலில் விழுந்தார். இதனை விஜய் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் பதறிப்போனார். அதாவது ரசிகர் மயங்கி விழுந்துவிட்டார் என விஜய் உள்பட அங்கிருந்த இயக்க நிர்வாகிகள் நினைத்தனர். மேலும் அந்த ரசிகரை தூக்கிவிட நிர்வாகிகள் ஓடிவந்தனர். இருப்பினும் விஜய் அந்த ரசிகரை தட்டி எழுப்பினார்.

இதையடுத்து முகம் மகிழ்ச்சியோடு அந்த ரசிகர் தரையில் இருந்து எழுந்து தனது செல்போனில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து செல்பி எடுத்ததோடு அவரை கட்டியணைத்தார். இந்த வேளையில் விஜய் அந்த ரசிகரின் தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பினார். இந்த சம்பவம் அங்கிருந்த விஜய் மக்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை நெகிழ வைத்தது.












Click it and Unblock the Notifications