மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தால்.. ராகுல் பிரதமர் ஆகிவிடுவாரா?.. ஈ.பி.எஸ் பேச்சு
நெல்லை: மு.க. ஸ்டாலின் முன்மொழிந்து விட்டால், ராகுல் காந்தி பிரதமர் ஆகிவிட முடியுமா என்று முதலமைச்சர் பழனிசாமி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வள்ளியூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், மத்தியிலும் மாநிலத்திலும் ஒருமித்த கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால்தான் தமிழகம் வளம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் ஆசை
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த பிறகு, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி என ஒவ்வொரு மாநிலத்திலும், ஒருவருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவர்களிடம் நாட்டைக் கொடுத்தால் நாடு தாங்குமா என்று கேள்வி எழுப்பிய அவர், குரங்கின் கையில் பூமாலை கொடுத்தது போல் ஆகும் எனக் கூறினார்.

மீண்டும் மோடி
ஏதேதோ பேசும் ஸ்டாலின், பிரதமரைப் பற்றி பேசும் அளவுக்கு பெரிய ஆள் ஆகிவிட்டார் என்றும், பிற நாட்டுத் தலைவர்களின் அன்பைப் பெற்று இந்தியாவை திரும்பிப்பார்க்க வைத்தவர் பிரதமர் மோடி என்றும் புகழாரம் சூட்டினார், அண்டை நாட்டு தீய சக்திகள், பயங்கரவாதிகளை மோடி என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும் என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, மோடி மீண்டும் பிரதமராக, அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முரண்பட்ட கூட்டணி
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சிகளின் கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது என்றும், எதிர்க்கட்சிகளோ முரண்பட்ட கூட்டணியை அமைத்திருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

பொய் மூட்டைகள்
தேர்தல் அறிக்கைகளில் கூறியிருப்பதை, அதிமுக தவறாமல் நிறைவேற்றி வருவதாகக் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, திமுக பொய்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்துவிடுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications