மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி.. சபாநாயகர் அப்பாவு சொன்ன முக்கியமான விஷயம்
திருநெல்வேலி: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரத்தில், தொழிலாளர்களின் நலன் சார்ந்து அரசு நல்ல முடிவை எடுக்கும். பல்லாயிரம் ஏக்கர் பரப்பு கொண்ட அந்த வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே, வனத்துக்கும் நல்லது, நமக்கும் நல்லது என்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, காரையாறு மற்றும் பாபநாசம் அணைப்பகுதிகளுக்கு மேல் அமைந்திருக்கும் வனப்பகுதியில் 3350 முதல் 4920 அடி வரையிலான உயரத்தில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய இடங்கள் அமைந்துள்ளன. இந்த இடங்களை சுருக்கமாக மாஞ்சோலை எஸ்டேட் என்று அழைக்கிறார்கள். 1919ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை, சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் என்ற தனியார் நிறிவனம் (BBTC) 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றிருந்தது.

அந்த இடத்தில் பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் நிறுவனம் தேயிலை, காபி, ஏலக்காய், கொய்னா, மிளகு போன்றவற்றைப் பயிரிட்டது. இந்த எஸ்டேட் பணிகளுக்காகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 'கங்காணிகள்' எனப்படும் தரகர்கள் மூலமாக கூலி வேலைக்கு ஆட்கள் அழைத்து வந்து ஈடுபடுத்தப்பட்டார்கள். அப்படி அழைத்து வரப்பட்டவர்களின் வாரிசுகள் பலர் நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் தற்போது வரையிலும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இந்த குத்தகை காலம் முடிவதற்கு இன்னும் 4 ஆண்டுகளே உள்ள நிலையில், மாஞ்சோலை பகுதியை வனத்துறை காப்புக்காடாக அறிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, மாஞ்சோலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை மலையிலிருந்து காலி செய்து, கீழே அனுப்பும் பணிகளை பிபிடிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் விருப்ப ஓய்வு வழங்கி வருகிறது. இதற்கான நோட்டீஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதேபோல் தற்போது வீடுகளை காலிசெய்ய சொல்லியும் பிபிடிசி நிறுவனம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்நிலையில் அரசே தேயிலை தோட்டங்களை ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்களை அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்க போகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரத்தில், தொழிலாளர்களின் நலன் சார்ந்து அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று சட்டசபை சபாநாயகரும், ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவுமான அப்பாவு கூறினார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு பேசுகையல், மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் விஷயத்தில், அங்குள்ள தொழிலாளர்களின் நலன் சார்ந்துதான் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும். பல்லாயிரம் ஏக்கர் பரப்பு கொண்ட அந்த வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே, வனத்துக்கும் நல்லது, நமக்கும் நல்லது. கேரள வனப் பகுதியில் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்ததாக தகவல் வந்துள்ளதால், மாஞ்சோலையில் தொழிலாளர்கள் இருப்பதுதான் நமக்கும் நல்லது.
மாஞ்சோலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவாக, தேயிலைத் தோட்டத்தை கையகப்படுத்த முடிவெடுக்க வேண்டும். அத்துடன் முழுமையாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்துப் பகுதிகளை வனத்துறையிடம் அளிப்பது சரியாக இருக்காது. அந்த வனப்பகுதி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தொழிலாளர்கள் அங்கே தொடர்ந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை அரசு வழங்க வேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.
மாஞ்சோலையில் உள்ளதொழிலாளர்களுக்கு குடிநீர், மின்சாரம் இணைப்பை துண்டிக்க முடியாது. அப்படி துண்டித்தால், அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதற்கு வனத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், தமிழக அரசும், மாவட்டநிர்வாகமும் பக்தர்கள் செல்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றன" இவ்வாறு அப்பாவு கூறினார்.












Click it and Unblock the Notifications